Home One Line P2 பிபைசர் கொரொனா தடுப்பு மருந்து 95% வெற்றிகரமாக செயல்படுகிறது

பிபைசர் கொரொனா தடுப்பு மருந்து 95% வெற்றிகரமாக செயல்படுகிறது

519
0
SHARE
Ad

வாஷிங்டன் : உலகம் முழுவதும் பல நாடுகளில் பல மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் கொரொனா தொற்றுக்கான தடுப்பு மருந்தைத் தயாரிப்பதிலும், அதனைப் பரிசோதிக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றன.

பரிசோதனைகளின் வழி வெற்றிகரமாக செயல்படக் கூடிய மருந்து தயாரிக்கப்பட்டால் அதனைத் தயாரிக்கும் நிறுவனம் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்ட முடியும்.

அமெரிக்காவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான பிபைசர் தங்களின் கொரொனா தடுப்பு மருந்து மூன்றாம் கட்ட பரிசோதனையில் தற்போது இருந்து வருவதாகவும் அந்தத் தொற்று நோய்க்கு எதிராக 95 விழுக்காடு வெற்றியைத் தாங்கள் பெற்றுள்ளதாகவும் இன்று புதன்கிழமை (நவம்பர் 18) அறிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

இதற்கு முன்னர் தங்களின் தடுப்பு மருந்து 90 விழுக்காடு வெற்றியைத் தந்துள்ளதாக அறிவித்த பிபைசர் தற்போது 95 விழுக்காடு வெற்றியை அந்த மருந்து தருவதாக அறிவித்திருப்பது மக்களிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் பிபைசர் பரிசோதனைகள் கடந்துள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்தது.

வழக்கமாக இதுபோன்ற மருந்துகளை அமெரிக்காவின் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிருவாக அமைப்பு  (FDA – US Food and Drug Administration) அங்கீகரித்த பின்னரே பயன்பாட்டுக்குக் கொண்டு வரமுடியும். ஆனால், அவசர கால அடிப்படையில் சில நாட்களுக்குள்ளேயே இதற்கான அங்கீகாரத்தைப் பெற முடியும் என பிபைசர் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இரண்டாவது சுற்று தடுப்பு மருந்தை எடுத்துக் கொண்டவர்களின் நிலைமை அடுத்த 2 மாதங்களுக்குக் கண்காணிக்கப்பட்ட பின்னர் இதற்கான அங்கீகாரத்தை அமெரிக்க எப்.டி.ஏ அமைப்பு பிபைசருக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்துலக அளவில் 50 மில்லியன் கொரொனா தடுப்பு மருந்து அளவைகள் (doses) இந்த ஆண்டு இறுதிக்குள் தயாரிக்கப்படும். இந்த எண்ணிக்கை 2021-இல் 1.3 பில்லியன் அளவைகளாக அதிகரிக்கப்படும்.

எனினும் பிபைசர் தயாரித்திருக்கும் மருந்து மிகவும் குளிர்ச்சியான நிலையில் வைத்திருக்கப்பட வேண்டும் என்பதாலும், இதற்கான குளிர்பதனப் பெட்டிகள் பரவலாக பயன்பாட்டில் இல்லை என்பதாலும் பிபைசர் தயாரித்திருக்கும் மருந்தின் தன்மை குறித்தும், அனைத்துலக அளவில் இதனை ஏற்றுமதி செய்யும் வசதிகள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.