(கடந்த 17 நவம்பர் 2020 செல்லியல் காணொலி தளத்தில் இடம் பெற்ற “யார் இந்த செலின் கவுண்டர்?” என்னும் காணொலியின் கட்டுரை வடிவம்)
அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றவுடன் சனிக்கிழமை நவம்பர் 7-ஆம் தேதி தனது முதல் வெற்றி உரையை நிகழ்த்தினார்.
கொவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்திற்காக சிறப்பு ஆலோசனை நடவடிக்கைக் குழு ஒன்றை அறிவிப்பேன் என்பதுதான் அவரது அன்றைய உரையின் முக்கிய அம்சம்.
தொடர்ந்து திங்கட்கிழமை நவம்பர் 9-ஆம் தேதியே அந்த சிறப்பு நடவடிக்கைக் குழுவை அமைத்தபோது அதில் 2 தென்னிந்தியர்கள் இடம் பெற்றிருந்தனர். உடனடியாக உலக இந்தியர்களின் கவனத்தை இது ஈர்த்தது.
ஒருவர் விவேக் மூர்த்தி. கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.
இன்னொருவர் டாக்டர் செலின் கவுண்டர். அடுத்த சில நாட்களில் இவர் தமிழர் – தமிழ் நாட்டின் ஈரோடு பகுதியைச் சேர்ந்தவர் – என்ற தகவல்கள் பரவ -உலகமெங்கும் உள்ள தமிழர்களின் கவனத்தை சில நாட்களிலேயே ஈர்த்து விட்டார் செலின்.

அழகான தோற்றமும், அமெரிக்க அதிபரே தேர்ந்தெடுத்த பெண்மணியாகவும் இருக்கிறாரே, யார் இவர்? என்ற இணையவழித் தேடுதல்களும் உடனடியாகத் தொடர்ந்தன.
செலின் கவுண்டர் யார்? இவரது பின்னணி என்ன? என்பதைப் பார்ப்போம்!
அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர்
பொதுவாக சாதிப் பெயரை தங்களின் சொந்தப் பெயருடன் இணைத்துக் கொள்வது பெரும்பாலும் தற்போது தமிழர்களிடையே வழக்கமாக இல்லை. எனினும் அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில் தந்தையாரின் பெயரோடு இணைத்துத்தான் ஒருவரின் பெயர் அதிகாரபூர்வமாகக் குறிப்பிடப்படும்.
உதாரணத்திற்கு கமலா ஹாரிஸ் பின்னால் ஒட்டிக் கொண்டு வரும் ஹாரிஸ் என்ற பெயரைப் போல!
அப்படித்தான் கவுண்டர் என்ற பெயரும் செலினோடு ஒட்டிக் கொண்டது. அவரது தந்தையார் பெயர் ராஜ் நடராஜன் கவுண்டர். தந்தை பெயரின் கடைசிப் பெயர் செலின் என்ற சொந்தப் பெயரோடு ஒட்டிக் கொள்ள செலின் கவுண்டர் என அதிகாரபூர்வமாகக் குறிப்பிடப்படுகிறார் அவர்.
43 வயதான செலின் அமெரிக்காவில் பிறந்தவர். அவரது தந்தையார் ராஜ் நடராஜன் தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில் மொடக்குறிச்சி வட்டாரத்தில் பெரும்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர்.
செலின் சுமார் 4 முறை தனது சொந்த கிராமத்திற்கு சென்று உறவினர்களைச் சந்தித்து அளவளாவியிருக்கிறார் என ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அவரது கொவிட்-19 ஆலோசனைக் குழு நியமனத்தைத் தொடர்ந்து அவரது சொந்த கிராமத்திலும் இனிப்பு வழங்கி உறவினர்கள் கொண்டாடியிருக்கின்றனர்.
கமலா ஹாரிசால் உலகப்புகழ் பெற்றுவிட்ட மன்னார்குடி, துளசேந்திரபுரம் கிராமத்தைப் போல இப்போது செலினின் வரவால் தமிழ்நாட்டின் பெரும்பாளையம் கிராமமும் உலகப் புகழ் பெற்றுவிட்டது.
கல்வி ஆற்றலும் பன்முகத் திறன்களும் கொண்டவர்
தொற்று நோய் துறையிலும் உலகளாவிய சுகாதார விவகாரங்களிலும் நிபுணத்துவம் வாய்ந்த செலின் அமெரிக்காவின் புகழ்பெற்ற பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் படித்தவர்.
மருத்துவர் என்பதோடு, தொற்றுநோய் நிபுணர், திரைப்படம் எடுப்பவர், மருத்துவ ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதுபவர், பல்கலைக் கழகப் பேராசிரியர் என பன்முகத் திறன்களும் கொண்டவர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு மருத்துவ விவகாரங்களை விவாதிப்பவர் செலின்.
மருத்துவராக பகுதி நேரம் பணியாற்றிக் கொண்டே தனது பெரும்பகுதி நேரத்தை மருத்துவ ஆராய்ச்சிகளுக்காக செலவிடுகிறார் செலின். மருத்துவத் துறைக்கும் பொதுமக்கள் சுகாதார மேம்பாட்டுக்கும் அவர் ஆற்றிய பணிகளுக்காக 2017-ஆம் ஆண்டில் “பியூபிள்ஸ் மேகசின்” (People Magazine) உலகை மாற்றி வரும் 25 பெண்மணிகளில் ஒருவராக அவரைத் தேர்ந்தெடுத்தது.
செலினின் தாயார் நோர்மாண்டி என்ற பிரான்ஸ் நாட்டு வட்டாரத்தின் பெண்மணி. தந்தையார் வான்வெளித் துறையில் பொறியியலாளர் (Aerospace Engineer).
பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் உயிரியல் துறையில் பட்டம்; ஜோன் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டம்; வாஷிங்டன் பல்கலைக் கழகத்தில் மருத்துவத் துறை பட்டம்; அதைத் தொடர்ந்து மருத்துவமனைப் பணிகள் என கல்வித் துறையிலும், மருத்துவத் துறையிலும் மிக விரிந்த கல்விச் சிறப்பும் அனுபவ ஆற்றலும் நிறைந்தவர் செலின்.
இப்படியாக அவரது கல்வி, மருத்துவ சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
ஆப்பிரிக்காவில் சமூக சேவைகள்
சமூக சேவைகளிலும் சளைத்தவரல்ல செலின். ஆப்பிரிக்காவில் இபோலா தொற்றுநோய் பரவியபோது அங்கு கினி (Guinea) நாட்டிற்கு சுயசேவையாளராகச் சென்று இரண்டு மாதங்கள் தங்கி பணியாற்றியிருக்கிறார். அந்தப் பயணம் குறித்த ஆவணப் படம் ஒன்றையும் தயாரித்து வருகிறார்.
டிபி எனப்படும் காசநோய், எச்ஐவி தொற்று ஆகியவை குறித்தும் செலின் தென்ஆப்பிரிக்கா, லெசோத்தோ, மலாவி, எத்தியோப்பியா, பிரேசில் போன்ற நாடுகளில் தங்கி ஆராய்ச்சி செய்திருக்கிறார்.
அமெரிக்காவின் தொற்றுநோய்க் கழகத்தின் பெல்லோஷிப் உறுப்பினர் என்ற கௌரவமும் அவருக்கு 2016-இல் வழங்கப்பட்டது.
கிராண்ட் வாஹ்ல் (Grant Wahl) என்பவரைத் திருமணம் செய்திருக்கிறார் செலின். கணவர் கிராண்ட் விளையாட்டுத் துறை எழுத்தாளராகவும், பத்திரிகையாளராகவும் பணியாற்றுகிறார்.
தற்போது இருவரும் நியூயார்க் நகரில் வசித்து வருகின்றனர்.
தமிழக முதல்வரின் வாழ்த்து
செலின் நியமனத்தைத் தொடர்ந்து தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தனது வாழ்த்துகளை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
செலினுக்கும், விவேக் மூர்த்திக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்து இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளீர்கள் என எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து செலின் தமிழ் வம்சாவளியினர் என்பதை அறிந்து பெருமை கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டிருக்கிறார் பழனிசாமி.
மற்ற பல தலைவர்களும் உலகத் தமிழர்களும் வழங்கிக் கொண்டிருக்கும் வாழ்த்துகள் செலினுக்குக் குவிந்து கொண்டிருக்கின்றன.
மிக இளமையான வயதில் அமெரிக்க அதிபரின் பார்வையில் பட்டு, உயரிய பதவியில் அமர்ந்திருக்கும் செலின், எதிர்காலத்தில் சுகாதாரத் துறையிலும் ஏன் அரசியல் துறையிலும் கூட அமெரிக்காவில் புதிய சிகரங்களைத் தொடக் கூடும் என கணிக்கப்படுகிறது.