கோலாலம்பூர்: ஆதாரமற்ற அறிக்கைகளுடன் மக்களைப் பயமுறுத்துவதற்கான முயற்சியை நிறுத்துமாறு, முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் இன்று அரசாங்கத் தலைவர்களை விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்றம் வரவு செலவு திட்டத்தை அங்கீகரிக்கவில்லை என்றால் புத்ராஜெயா அரசு ஊழியர்களின் சம்பளத்தை வழங்க முடியாது என்று நிதியமைச்சர் தெங்கு ஜாப்ருல் அசிஸின் கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இதனைக் கூறியுள்ளார்.
“அந்த கூற்று, வரவு செலவு திட்டம், மக்களின் நலன்களை நிறைவேற்றுவதை உறுதி செய்வதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, ஆனால், ஆளும் கட்சியின் எண்ணத்தை அல்ல,” என்று மகாதீர் கூறினார்.
தெங்கு ஜாப்ருல் மற்றும் பிற அரசாங்கத் தலைவர்கள், பலவீனங்களை மீறி வரவு செலவு திட்டத்தை நிறைவேற்றுமாறு நாடாளுமன்ற உறுப்பர்களை அச்சுறுத்துவதற்காக அறிக்கைகளை வெளியிடுவதில் பொறுப்பற்று நடந்து கொள்கிறார்கள் என்று அவர் கூறினார்.
“இது நிதி அமைச்சர் மற்றும் அரசாங்கத் தலைவர்களின் நிலைப்பாடு என்றால், இதன் பொருள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் (அரசாங்கத்திற்கு) ஒரு வெற்று காசோலையை அளித்து வரவு செலவு திட்டத்தை ஆதரிக்க வேண்டும்.”
நேற்று, மகாதீரின் கட்சி பெஜுவாங், அரசு ஊழியர்களுக்கான ஊதியம் மற்றும் மருத்துவ மற்றும் சுகாதார உபகரணங்கள் உள்ளிட்ட முன்னணி பணியாளர்களின் செலவுகள், வரவு செலவு திட்டம் நிராகரிக்கப்பட்டால் பாதிக்கப்படாது என்று கூறியிருந்தது.