திருவாரூர் : ஒரு பக்கம் பாஜகவினர் நடத்தும் வேல்யாத்திரை, அதனை எதிர்த்து அதிமுக நடத்தி வரும் அதிரடி தடை உத்தரவுகள், நாளை சனிக்கிழமை நவம்பர் 21 உள்துறை அமைச்சரும் பாஜக தலைவர்களில் ஒருவருமான அமித் ஷா சென்னைக்கு வருகை, என பல்வேறு தளங்களில் தமிழக அரசியல் பரபரப்பாகியிருக்கும் நிலையில், இன்று உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.
கலைஞர் கருணாநிதியின் பூர்வீக நகரான திருக்குவளையில் உதயநிதி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியபோது, அனுமதியின்றி பிரச்சாரத்தை மேற்கொண்டதாகக் காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர்.
அப்போது அங்கு குழுமியிருந்த திமுகவினருக்கும்,காவல் துறையினருக்கும் இடையில் மோதல்கள் நிகழ்ந்தன.
உதயநிதி அருகிலிருந்த திருமண மண்டபம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டார்.
இன்று காலை முதல், திருச்சி வந்தடைந்த உதயநிதியை காவல் துறையினர் தொடர்ந்து கண்காணித்து பின்னர் மாலையில் கைது செய்தனர்.
கலைஞர் கருணாநிதி கடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதே தொகுதியில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் உதயநிதி போட்டியிடுவார் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. கருணாநிதியின் பூர்வீக நகரான திருக்குவளையும் திருவாரூர் தொகுதியின் கீழ் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.