Home One Line P1 தேசிய சேவை பயிற்சிக்கான நிதியை பல்கலைக்கழகங்களுக்கு செலவழிக்கலாம்

தேசிய சேவை பயிற்சிக்கான நிதியை பல்கலைக்கழகங்களுக்கு செலவழிக்கலாம்

447
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மீண்டும் தேசிய சேவை பயிற்சி திட்டத்தைக் கொண்டு வரும் எண்ணத்திற்கு முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சைட் சாதிக் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதற்காகப் பயன்படுத்த இருக்கும் நிதி வேறு பயனுள்ள திட்டங்களுக்கு பயன்படும் என்று அவர் கூறியுள்ளார்.

அத்திட்டமானது ஒரு வருடத்திற்கு 700 மில்லியன் ரிங்கிட் செலவைக் கொண்டிருப்பதால், முன்னாள் அரசாங்கம் அத்திட்டத்தை கைவிட்டதாக சைட் கூறினார். மேலும் , பெரும்பாலான ஒப்பந்தங்கள் அம்னோ தலைவர்களை பணக்காரர்களாக்கியது என்றும் அவர் கூறினார்.

“மூன்று மாத தேசிய சேவை பயிற்சி திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் நிதியை அரசாங்கப் பல்கலைக்கழகங்களில் உதவித்தொகைகளுக்காகப் பயன்படுத்தப்படலாம்,” என்று சைட் சாதிக் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

#TamilSchoolmychoice

2018- ஆம் ஆண்டில் நம்பிக்கைக் கூட்டணி நிர்வாகத்தின் போது இரத்து செய்யப்பட்ட தேசிய சேவை பயிற்சி திட்டத்தை (பிஎல்கேஎன்) மீண்டும் ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தற்காப்பு அமைச்சர் நேற்று தெரிவித்திருந்தார்.

இந்த திட்டம் பள்ளியை விட்டு வெளியேறிய பின்னர் அதில் பங்கேற்ற இளைஞர்களிடையே தேசபக்தி உணர்வை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

“பிஎல்கேஎன் 2018- இல் இரத்து செய்யப்பட்டது. ஆனால், இந்த திட்டத்தில் பங்கேற்ற இளைஞர்களிடையே தேசபக்தியின் வளர்ச்சியில் முன்னேற்றத்தைக் காண முடிந்ததன் அடிப்படையில், இந்த திட்டத்தை மீண்டும் செயல்படுத்த அமைச்சகம் அமைச்சரவைக்கு பரிந்துரை செய்யும், ” என்று அவர்  மக்களவையில் கூறினார்.

சேவையில் ஈடுபடும்போது பல பயிற்சியாளர்கள் இறந்ததை அடுத்து தேசிய சேவை திட்டம் கடும் விமர்சனத்தை பெற்றது.

2007- ஆம் ஆண்டில், முகமட் ரபி அமீரின் குடும்பம், திரெங்கானு கெமாமானில் உள்ள ஒரு பயிற்சி முகாமில் அசுத்தமான உணவை சாப்பிட்டதாகக் கூறி 18 வயது பயிற்சியாளர் இறந்ததை அடுத்து 10 மில்லியன் ரிங்கிட் அலட்சியம் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தது.

மார்ச் 2012- இல், 18 வயதான பயிற்சியாளர் ஆர்.வினோத் மூன்று நாட்களுக்கு காய்ச்சலுக்கு உட்பட்டு இறந்தார். பிரேத பரிசோதனையின்படி, வினோத் லெப்டோஸ்பிரோசிஸுக்கு (எலி சிறுநீர்) ஆளானது தெரிய வந்தது.

ஜூன் 2009- இல், அப்துல் மாலிக் இஷாக், 18, பெர்லிஸ் பாடாங் பெசாரில் அவரது படுக்கையில் இறந்து கிடந்தார். அவரது உடல்நல அறிவிப்பு படிவத்தில் அவருக்கு மருத்துவ பாதிப்புகள் எதுவும் இல்லாதது குறிப்பிடத்தக்கது.