Home One Line P1 தமிழ்ப் பள்ளிகளுக்கு 29.98 மில்லியன் மட்டுமே!

தமிழ்ப் பள்ளிகளுக்கு 29.98 மில்லியன் மட்டுமே!

981
0
SHARE
Ad

கோலாலம்பூர் : 2021 வரவு செலவுத் திட்டத்தின் கீழ் தமிழ்ப் பள்ளிகளுக்கு 29.98 மில்லியன் ரிங்கிட் மட்டுமே ஒதுக்கப்படுவதாக கல்வி அமைச்சர் முகமட் ராட்சி ஜிடின் (படம்) அறிவித்தார். நாட்டிலுள்ள அனைத்து 527 தமிழ்ப் பள்ளிகளுக்கும் இந்த நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது.

2020-ஆம் ஆண்டில் தமிழ்ப் பள்ளிகளுக்கு மேம்பாட்டு நிதியாக அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்த முறை அனைத்து பள்ளிகளுக்கும் சேர்த்து 50 மில்லியன் ரிங்கிட் மட்டுமே 2021 வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டதால், இந்தியக் கல்வியாளர்கள், அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள் என அனைத்துத் தரப்பிலிருந்தும் கடுமையானக் கண்டனங்கள் எழுந்தன.

அதைத் தொடர்ந்து, இந்தக் கண்டனங்களுக்குப் பதிலளித்த மஇகா தேசியத் துணைத் தலைவரும், மனிதவள அமைச்சருமான டத்தோஸ்ரீ எம்.சரவணனன் தமிழ்ப் பள்ளிகளுக்கான உள் ஒதுக்கீடு எவ்வளவு என்பதை கல்வி அமைச்சர் விரைவில் அறிவிப்பார் எனத் தெரிவித்திருந்தார்.

#TamilSchoolmychoice

அதன்படி, நாடாளுமன்றத்தில் பள்ளிகளுக்கான ஒதுக்கீடுகளுக்கான விவரங்களை வெளியிட்ட கல்வி அமைச்சர் நேற்றிரவு பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றிலும் கூடுதல் விவரங்களை வெளியிட்டார்.

அரசாங்கத் தமிழ்ப் பள்ளிகளுக்கும், அரசாங்க உதவி பெறும் தமிழ்ப் பள்ளிகளுக்கும் அதன்படி 29.98 மில்லியன் ரிங்கிட் மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது.

எனினும் பள்ளிகள் கூடுதல் நிதி தேவைப்பட்டால் அதற்காக விண்ணப்பிக்கலாம் என்றும் அதற்காக சிறப்பு கூடுதல் நிதிகள் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

பள்ளிகள் கட்டமைப்புக்காக மொத்தம் 620 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் அரசாங்கக் கல்வி மையங்களுக்காக 50 மில்லியன், நில சீர்ப்படுத்துதலுக்காக 50 மில்லியன், திறந்த வெளி மண்டபங்களைக் கட்டுவதற்கும் மேம்படுத்துவதற்கும் 50 மில்லியன், நெருக்கடி நிதியாக 30 மில்லியன் என கூடுதல் நிதி ஒதுக்கீடுகள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன.

இந்த அடிப்படையில் நிதி தேவைப்படும் பள்ளிகள் கூடுதலாக நிதி கேட்டு கல்வி அமைச்சுக்கு விண்ணப்பிக்கலாம்.

30 மில்லியனுக்கும் குறைவாகப் பெறும் பள்ளி குழுமங்கள் இந்த 30 மில்லியன் நெருக்கடி நிதியை அவசர சீரமைப்புப் பணிகளுக்குப் பயன்படுத்த விண்ணப்பிக்கலாம்.

தமிழ்ப் பள்ளிகளுக்கு 29.98 மில்லியன் ரிங்கிட் மட்டுமே கட்டமைப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளதால், தமிழ்ப் பள்ளிகள் இனி இந்த 30 மில்லியன் கூடுதல் நெருக்கடி நிதியிலிருந்து ஒதுக்கீடு பெற விண்ணப்பிக்கலாம்.

சீனப் பள்ளிகளுக்கு நிதி அதிகரிப்பு

2020-ஆம் ஆண்டில் சீனப்பள்ளிகளுக்கும் 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் 2021-ஆம் வரவு செலவுத் திட்டத்தின் கீழ் கல்வி அமைச்சர் நேற்று அறிவித்த ஒதுக்கீட்டின்படி 74.07 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டை சீனப் பள்ளிகள் அடுத்த ஆண்டு பெறும்.

இது 48.1 விழுக்காடு அதிகரிப்பாகும்.