Home One Line P1 “மகாதீர் குறித்து பொய் கூற வேண்டாம்” – அஸ்மினுக்குப் பதிலடி

“மகாதீர் குறித்து பொய் கூற வேண்டாம்” – அஸ்மினுக்குப் பதிலடி

633
0
SHARE
Ad

கோலாலம்பூர் : “தேசியக் கூட்டணி அமைக்கும் ஆலோசனை வழங்கியதே மகாதீர்தான் என அஸ்மின் அலி பொய் கூறியிருக்கிறார்” என பெஜூவாங் கட்சியின் குவாங் சட்டமன்ற உறுப்பினர் சாலேஹூடின் அமிருடின் சாடியுள்ளார்.

“நானும் ஷெராட்டன் தங்கும் விடுதியில் அப்போது இருந்தேன். நாடாளுமன்ற உறுப்பினர்களின் சத்தியப் பிரமாண ஆதரவுக் கடிதங்கள் மகாதீருக்கும், முக்ரிஸ் மகாதீருக்கும் தெரியாமல் பெறப்பட்டன என என்னிடம் கூறப்பட்டது. தேசியக் கூட்டணி என்ற பெயரில் புதிய அரசாங்கம் அமைக்கப்படுகிறது. அதற்கு மகாதீரும் மொகிதின் யாசினும் பிரதமர் வேட்பாளர்கள் எனவும் என்னிடம் கூறப்பட்டது” என சாலேஹூடின் அமிருடின், அஸ்மின் அலியின் கூற்றுக்குப் பதிலடியாக இன்று விடுத்த அறிக்கையில் தெரிவித்தார்.

“மகாதீர் தேசியக் கூட்டணி அரசாங்கத்திற்கு தலைமையேற்க மறுத்தார். காரணம் அப்படி செய்தால் ஒட்டுமொத்த அம்னோவுடன் இணைந்து பணியாற்ற வேண்டி இருக்கும். தனது கொள்கைகளையும் கௌரவத்தையும் விட்டுக்கொடுத்து இருந்தால் மகாதீர் இன்றுவரை அவரே பிரதமராக இருந்திருப்பார். எனவே, மகாதீரைப்  பிரதமராக கொண்டு தேசிய கூட்டணி அரசாங்கத்தை அமைக்க முற்பட்டோம் என அஸ்மின் கூறுவது நம்ப முடியாததாக இருக்கிறது. பிரதமராக வருவதற்கு பெரியதாக ஆசைகள் கொண்டிருந்தவர் அஸ்மின் அலி தான்” என்றும் சாலேஹூடின் அமிருடின் தனது அறிக்கையில் கூறினார்.

#TamilSchoolmychoice

மேலும் தன்னையே துணைப் பிரதமராக நியமிக்க வேண்டும் என பின்கதவு வழியாக நுழைந்து மகாதீரிடம் கோரிக்கை வைத்ததும் அஸ்மின் அலி தான் என்றும் சாலேஹூடின் அமிருடின் குறிப்பிட்டார்.

“ஆனால் மகாதீர் அஸ்மினின் அந்தக் கோரிக்கையை நிராகரித்தார். ஏற்கனவே வாக்களித்தபடி அப்போதைய பிகேஆர் கட்சித் தலைவர் வான் அசிசாவையே துணைப் பிரதமராக நியமித்தார். பதவி ஆசை பிடித்த அரசியல்வாதியான அஸ்மின் அலி பிரதமர் மொகிதின் யாசின் எங்கே இப்போது அம்னோ தலைவர் சாஹிட் ஹாமிடியை  துணைப் பிரதமராக நியமித்து விடுவாரோ என்ற அச்சத்தினால்தான் இன்று இப்படியெல்லாம் பேசி இருக்கிறார்” எனவும் சாலேஹூடின் அமிருடின் அஸ்மினைத் தனது அறிக்கையில் சாடியிருக்கிறார்.