Home One Line P2 “கமலா ஹாரிசுக்கு அடுத்த இந்திய அமெரிக்க செனட்டர் யார்?”

“கமலா ஹாரிசுக்கு அடுத்த இந்திய அமெரிக்க செனட்டர் யார்?”

656
0
SHARE
Ad

selliyal | After Kamala Harris, who is the next Indian American Senator? |
“கமலா ஹாரிசுக்கு அடுத்த இந்திய அமெரிக்க செனட்டர் யார்
?” என்ற தலைப்பில் செல்லியல் காணொலி தளத்தில் இடம் பெற்ற காணொலியின் கட்டுரை வடிவம்

அமெரிக்க வரலாற்றில் 2016-ஆம் ஆண்டில் செனட்டராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளியினராக சாதனை படைத்தவர் கமலா ஹாரிஸ்.

அமெரிக்க நாடாளுமன்றம் இரண்டு அவைகளாகச் செயல்படுகிறது. பிரதிநிதிகள் மன்றம் (House of Representatives) என்பது மக்களவைக்கு ஒப்பாகும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை 435 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுத் தேர்தல் மூலம் இந்த அவைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

#TamilSchoolmychoice

அமெரிக்க நாடாளுமன்ற அமைப்பில் செனட் எனப்படும் மேலவை, மிகுந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அமெரிக்க மேலவையில் 100 செனட்டர்கள் மட்டுமே பதவி வகிப்பார்கள்.

ஒரு மாநிலத்திற்கு இரண்டு செனட்டர்கள் என்ற அளவில் அமெரிக்காவின் 50 மாநிலங்களில் இருந்து இந்த 100 செனட்டர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

ஒருமுறை செனட்டராகத் தேர்ந்தெடுக்கப்படுபவர் 6 ஆண்டுகளுக்குப் பதவி வகிப்பார்.

அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு பல முறை பல இந்தியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

அமெரிக்க மாநிலங்களின் ஆளுநர்களாகக் கூட சில இந்தியர்கள் பதவி வகித்திருக்கிறார்கள்.

ஆனால், அமெரிக்க மேலவையான செனட் மன்றத்திற்கு கலிபோர்னியா மாநிலத்திலிருந்து 2016-இல் தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸ்தான் முதல் இந்திய வம்சாவளி செனட்டர்.

கமலா ஹாரிஸ், 6 ஆண்டுகளுக்கு அதாவது எதிர்வரும் 2022-ஆம் ஆண்டு வரை செனட்டராகப் பதவி வகிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

அதே சமயத்தில் தற்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனின் துணையதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் கமலா ஹாரிஸ்.

எதிர்வரும் ஜனவரி 20-ஆம் தேதி அவர் துணையதிபராகப் பதவியேற்று வெள்ளை மாளிகையில் நுழைவார்.

செனட் மன்றத்தின் தலைவராகும் கமலா ஹாரிஸ்

அமெரிக்க சட்டப்படி, துணையதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் செனட்டராகத் தொடர்ந்து பதவி வகிக்க முடியாது.

எனவே, எதிர்வரும் ஜனவரி 20-ஆம் தேதிக்கு முன்னதாக கமலா ஹாரிஸ் தனது செனட்டர் பதவியிலிருந்து விலக வேண்டியதிருக்கும்.

அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த டொனால்ட் டிரம்ப் ஜோ பைடனின் வெற்றியை எதிர்த்து, சில மாநிலங்களில் வழக்கு தொடுத்திருக்கிறார். இந்த வழக்குகளின் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டு, ஜோ பைடனும் கமலா ஹாரிசும் அதிகாரபூர்வமாக அதிபர், துணையதிபராக அறிவிக்கப்பட்டவுடன் கமலா ஹாரிஸ் தனது செனட்டர் பதவியிலிருந்து விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனவரி 20-ஆம் தேதி முதல் துணையதிபராகப் பதவி வகித்துக் கொண்டே, அமெரிக்க செனட் மன்றத்தின் அவைத் தலைவராகவும் பொறுப்பேற்பார் கமலா ஹாரிஸ்.

அமெரிக்கத் துணையதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுபவர் இயல்பாகவே செனட் மன்றத்தின் அவைத் தலைவராகவும் பதவி வகிப்பார் என அமெரிக்க சட்டம் தெரிவிக்கின்றது.

செனட் மன்ற அவைத் தலைவராக அவர் செனட் விவாதங்களில் பங்கெடுக்கலாம் என்றாலும் பொதுவாக துணையதிபராக இருப்பவர்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ள மாட்டார்கள்.

ஆனால், செனட் மன்றத்தின் வாக்களிப்பில் இரு தரப்புக்கும் சரிசமமான வாக்குகள் கிடைக்கும் பட்சத்தில்  நிர்ணயிக்கும் இறுதி வாக்கை அளிக்கும் உரிமை அவைத் தலைவர் என்ற முறையில் துணையதிபருக்கு இருக்கும்.

சரி! செனட்டர் பதவியிலிருந்து கமலா ஹாரிஸ் விலகியவுடன் அந்தப் பதவி என்னவாகும்?

கமலா ஹாரிசின் எஞ்சிய பதவிக் காலத்திற்கு இன்னொருவர் நியமனம்

கலிபோர்னியா மாநில சட்டங்களின்படி, கமலா ஹாரிசின் செனட்டர் பதவிக்கான எஞ்சிய காலத்திற்கு, அதாவது 2022 வரை இன்னொருவரை கலிபோர்னியா மாநிலத்தின் நடப்பு ஆளுநர் அதாவது கவர்னர் நியமிக்க வேண்டும்.

மாநில கவர்னர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், பதவி விலகும் கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவராக இருப்பதால் அதே கட்சியைச் சேர்ந்தவரைத்தான் கவர்னர், அடுத்த செனட்டராக நியமிக்க முடியும்.

அதன்படி எதிர்வரும் 2022-ஆம் ஆண்டு வரை ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த இன்னொருவர் கமலா ஹாரிசுக்குப் பதிலாக செனட்டராக நியமிக்கப்படுவார்.

கமலா ஹாரிசுக்குப் பதிலாக, அந்தப் புதிய செனட்டராக நியமிக்கப்படக் கூடிய வாய்ப்புள்ளவர்களில் யாருமே அமெரிக்க இந்தியர்கள் இல்லை என்ற தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

கமலா ஹாரிஸ் போன்று கறுப்பின வம்சாவளியைச் சேர்ந்த அல்லது தென் அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்த பெண்மணியை கமலா ஹாரிசுக்குப் பதிலாக செனட்டராக நியமிக்க வேண்டும் என ஜனநாயகக் கட்சியின் சார்பில் என கவர்னருக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

எனவே, கமலா ஹாரிசுக்குப் பதிலாக இந்தியர்கள் யாரும் அமெரிக்க செனட்டராக அடுத்துப் பதவியேற்கும் வாய்ப்பில்லை.

2022-ஆம் ஆண்டில் கமலா ஹாரிஸ் பதவி விலகிய, செனட்டர் பதவிக்கான தேர்தல் மீண்டும் நடைபெறும்.

அப்போது ஒருவேளை இந்தியர்கள் யாரும் கலிபோர்னியா மாநில செனட்டருக்கான போட்டிக்குத் தங்களை முன்னிறுத்தலாம்.

அல்லது அடுத்த சுற்று செனட் தேர்தல் 2022-இல் நடைபெறும்போது வேறு மாநிலங்களில் இருந்து இந்தியர்கள் யாராவது செனட்டர்களாகப் போட்டியிட குடியரசுக் கட்சியிலிருந்தோ, ஜனநாயகக் கட்சியிலிருந்தோ முன்வரலாம்.

கமலா ஹாரிசுக்குப் பிறகு மதிப்பு மிகுந்த செனட்டர் பொறுப்பை ஏற்கும் இந்திய வம்சாவளியினர் அமெரிக்க அரசியலில் அடுத்து உதிப்பார்களா?

காத்திருக்கின்றனர் அமெரிக்க இந்திய சமூகத்தினர்!

-இரா.முத்தரசன்