கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்று பாதிப்பின் விளைவுகளைச் சமாளிக்க மக்களுக்கு உதவுவதற்காக செயல்படுத்தப்பட்ட ஐ-சினார் திட்டத்தின் மூலம் கணக்கு 1- இல் இருந்து சேமிப்பைத் திரும்பப் பெற தகுதியுள்ள இரண்டு வகை பங்களிப்பாளர்களை ஊழியர் சேமநிதி வாரியம் (ஈபிஎப்) அறிவித்துள்ளது.
தகுதியான உறுப்பினர்கள் தங்கள் கணக்கில் உள்ள நிலுவை அடிப்படையில் கணக்கு 1- லிருந்து பணத்தை திரும்பப் பெறலாம் என்று ஈபிஎப் ஓர் அறிக்கையில் அறிவித்தது.
கணக்கு 1- இல் 100,000 ரிங்கிட் மற்றும் அதற்குக் கீழே உள்ளவர்கள் ஆறு மாதங்களுக்கு பணத்தை திரும்பப் பெறலாம். முதல் கட்டமாக அதிகபட்சம் 5,000 ரிங்கிட் வரை பணம் செலுத்தப்படும்.
கணக்கு 1- இல் 100,000- க்கும் அதிகமான இருப்பு உள்ள பங்களிப்பாளர்களுக்கு, அவர்கள் கணக்கு 1 சேமிப்பில் 10 விழுக்காடு வரை அல்லது 60,000 ரிங்கிட் வரை திரும்பப் பெறலாம்.
அதிகபட்சம் ஆறு மாதங்களுக்குள் முதல் கட்டணம் 10,000 ரிங்கிட் வரை செலுத்தப்படும்.
“விண்ணப்ப செயல்முறையானது சீராக இயங்குவதை உறுதிசெய்ய, உறுப்பினர்கள் ஐ-அகாவுன் (i-akaun) பதிவு செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள். ஈபிஎப் கியோஸ்க் அல்லது முகப்பிடத்தில் பரிவர்த்தனை அங்கீகாரக் குறியீட்டை (டிஏசி) பெற அவர்களின் கைபேசி எண்ணைப் புதுப்பிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். அவர்களின் வங்கி கணக்கு எண் செயலில் இருப்பதை உறுதிப்படுத்தவும்,” என்று ஈபிஎப் அறிக்கை கூறியுள்ளது.
ஐ-சினார் தகுதி பெற்ற இரண்டு வகை பங்களிப்பார்கள் பின்வருமாறு:
வகை 1: உறுப்பினர்கள் விண்ணப்பத்தின் போது குறைந்தது இரண்டு மாதங்களுக்கு ஈபிஎப் பங்களிப்பு இல்லாதவர்களாக இருக்க வேண்டும் அல்லது இன்னும் பணியில் உள்ள பங்களிப்பாளர்கள், ஆனால், மார்ச் மாதத்திற்குப் பிறகு அடிப்படை சம்பளத்தில் 30 விழுக்காடு அல்லது அதற்கும் மேல் குறைப்பு ஏற்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
வகை 1 உறுப்பினர்களுக்கு, ஈபிஎப்பின் உள்தரவின் அடிப்படையில் தானாகவே பணம் செலுத்தப்படும் மற்றும் துணை ஆவணங்கள் எதுவும் தேவையில்லை.
பங்களிப்பாளர்கள் டிசம்பர் 21 முதல் ஈபிஎப் ஐ-சினார் வலைத்தளத்தின் மூலம் மட்டுமே இயங்கலையில் விண்ணப்பிக்க வேண்டும். 2021 ஜனவரி நடுப்பகுதியில் இருந்து பணம் செலுத்தப்படும்.
இதற்கிடையில், பிரிவு 2 உறுப்பினர்கள் 2020 மார்ச் மாதத்திற்குப் பிறகு அடிப்படை சம்பளம், உதவித் தொககள் மற்றும் பிற சலுகைகள் உட்பட 30 விழுகாடு மற்றும் அதற்கு மேற்பட்ட வருமானத்தை இழந்தவர்கள்.
ஆவணங்களின் மூலம் மட்டுமே குறைப்பு அடையாளம் காணப்படும் என்று ஈபிஎப் தெரிவித்துள்ளது.
வகை 2- இல் உள்ள பங்களிப்பாளர்களுக்கு ஜனவரி 11 முதல் isinar.kwsp.gov.my மூலம் இயங்கலையில் விண்ணப்பிக்கலாம்.