Home One Line P1 இந்நாட்டு இந்தியர்களின் பிரச்சனையை கெடா மந்திரி பெசார் தெரிந்து வைத்திருக்கவில்லை

இந்நாட்டு இந்தியர்களின் பிரச்சனையை கெடா மந்திரி பெசார் தெரிந்து வைத்திருக்கவில்லை

796
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மஇகா கட்சி சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்பட வேண்டும் என்ற கெடா மந்திரி பெசாரின் கூற்று இந்த நாட்டில் இந்துக்கள் எதிர்கொள்ளும் நீண்டகால பிரச்சனைகள் குறித்து அவர் புரிந்து கொள்ளாததை தெளிவாக சித்தரிக்கிறது என்று மலேசிய முன்னேற்றக் கட்சித் தலைவர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்தார்.

இந்த நாட்டில் இந்தியர்களின் பங்களிப்புகளின் வரலாற்றை மந்திரி பெசார் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

“சட்ட மற்றும் சட்டவிரோத கோயில்களைப் பற்றி பேசுவதற்கு முன், இந்த நாட்டிற்கு இந்திய சமூகம் அளித்த பங்களிப்புகளின் வரலாற்றைக் கற்றுக்கொள்ளுகள். ஜூலை மாதம், இவர் அலோர் ஸ்டார் இரயில் நிலையத்திற்கு முன்னால் கிட்டத்தட்ட 80 ஆண்டுகள் பழமையான கோவிலை இடிப்பதை நியாயப்படுத்தினார். மலேசிய சட்டங்கள் பெரும்பாலானவை இயற்றப்படுவதற்கு முன்னர் காலனித்துவ காலத்தில் இந்த கோயில் கட்டப்பட்டது என்பது வெளிப்படையானது,” என்று வேதமூர்த்தி தமது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

கோவில் வளர்ச்சித் திட்டத்தின் பாதையில் இருப்பதாக அரசாங்கத்திற்குத் தோன்றியிருந்தால், பொறுப்புள்ள ஒரு மந்திரி பெசாராக அந்தக் கோயிலுக்கு மாற்று நிலத்தை வழங்கியிருக்க வேண்டும் என்று வேதமூர்த்தி கூறினார்.

“மாறாக, கோயில் சட்டவிரோதமாக கட்டப்பட்டதாகக் கூறி சட்டத்தின் பின்னால் ஒளிந்து கொள்ள அவர் தேர்வு செய்தார். மெர்டேகாவுக்குப் பிறகு தேவையான சட்டங்கள் இயற்றப்பட்டபோது ஒரு கோயில் எவ்வாறு சட்டவிரோதமானது? இது தெளிவாக மந்திரி பெசரின் சட்டவிரோத செயல் மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமானது,” என்று அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கத் தரப்பில் புரிந்துணர்வு இல்லாததாலும், கோயில்களை இடமாற்றம் செய்வதற்கான முறையான கொள்கைகளாலும் இந்து சமூகத்திற்கு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஒரு தீர்வை வழங்குவதற்குப் பதிலாக, இந்த பாஸ் கட்சியைச் சேர்ந்த மந்திரி பெசார் கோயில்களை இடிக்கும் இரக்கமற்ற செயலை கையில் எடுத்துள்ளார் என்று வேதமூர்த்தி சாடினார்.

“அநேகமாக அவர் ஓர் இஸ்லாமிய மாநில அரசாங்கத்தை அரசியல் இலாபத்திற்காக ஆதரிக்கிறார் என்பது தெரிகிறது. கிளந்தானில் கூட, தோக் குரு நிக் அசிஸின் தலைமையில் கோயில்களுக்கு செய்துள்ளது. கெடா மந்திரி பெசார் தோக் குரு போன்ற நல்ல இஸ்லாமிய தலைவர்கள் வகுத்துள்ள மதிப்புகள் மற்றும் கொள்கைகளை பின்பற்ற வேண்டும்,” என்று வேதமூர்த்தி கூறினார்.

நேற்று புதன்கிழமை, கோயில்கள் இடிக்கப்பட்டதைக் கேள்வி எழுப்பிய மஇகா கட்சியை சங்கப் பதிவாளர் இரத்து செய்யலாம் என்று முகமட் சனுசி முகமட் நூர் மிரட்டியிருந்தார். மஇகா சட்டபூர்வமற்ற விவகாரங்களில் தலையிடுவதாகக் கூறி அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.