கோலாலம்பூர்: கெடா, அலோர்ஸ்டார், தாமான் பெர்சத்துவில் அமைந்துள்ள இராஜ முனீஸ்வரர் ஆலயத்தை உடைக்க அனுமதித்ததன் வழி கடந்த ஜூலை மாதம் இரண்டு மத்திய அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியை அம்மாநில மந்திரி புசார் முகமட் சனுசி முகமட் நோர் காப்பாற்றத் தவறிவிட்டதாக மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ சரவணன் சாடியுள்ளார்.
”கெடா மாநிலத்தில் உள்ள இந்துக் கோவில்கள் தொடர்பாக, எனக்கும், தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் டத்தோ ஹாலிமா முகமட் சாடி, மற்றும் கெடா மந்திரி பெர்சார் முகமட் சனுசிக்கும் இடையில், கடந்த ஜூலை 26-ஆம் தேதி சந்திப்பு நடத்தப்பட்டது.”
”அதில் அக்கோவில் உடைப்புப் பற்றி முதலில் எங்கள் இருவருக்கும் தெரிவிப்பதாக முடிவு செய்யப்பட்டது. அந்த உறுதிப்பாடு இந்துக் கோவில்களுக்கு மட்டும் வழங்கப்படாமல் அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த வாக்குறுதியை மதிக்காமல், முகமட் சனுசி இவ்வாறு நடந்துகொண்டது எனக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது,” என்று சரவணன், இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், இந்நடவடிக்கை தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராகவும் தற்போதைய ஆட்சி குறித்து இந்தியர்களின் நம்பிக்கையைப் பாதிப்படையச் செய்திருப்பதாகவும் அவர் கூறினார்.
”அக்கோவில் உடைக்கப்பட்டது தொடர்பாக, மந்திரி புசார் விளக்கமளிக்க வேண்டும். இல்லையேல் இது அதிகார துஷ்பிரயோகமாக கருதப்படும்,” என்றும் சரவணன் திட்டவட்டமாக கூறினார்.
அதோடு, கெடா மாநிலத்தில் உள்ள வழிபாட்டுத் தளங்கள் குறித்த தமது நிலைப்பாட்டையும் அவர் விளக்க வேண்டும் என்று சரவணன் கேட்டுக்கொண்டார்.
பாஸ் கட்சியானது இந்நாட்டில் உள்ள அனைத்து இனத்துக்குமான , சமயத்துக்குமான கட்சி என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் சரவணன், இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில்செய்தி அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
— பெர்னாமா