கோலாலம்பூர்: சுங்கை சிலாங்கூரில் சமீபத்திய துர்நாற்ற மாசு சம்பவத்தில் நீர் துண்டிப்புகள் எதுவும் இல்லை என்று சிலாங்கூர் அரசு தெரிவித்துள்ளது.
மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறுகையில், உயரமான நிலத்தில் அமைந்துள்ள பயனீட்டாளர்கள் சுமார் 20 முதல் 30 விழுக்காடு மட்டுமே குறைந்த நீர் அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.
“நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன. பிற்பகல் 3 மணிக்கு நீர் வழங்கல் இயல்பு நிலைக்குத் திரும்பும். நள்ளிரவுக்குள், நீர் வழங்கல் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும், ” என்று அவர் கூறினார்.
ஒரு நிறுவனத்திற்கு சொந்தமான 57 மீன் வளர்ப்புக் குளங்களில் ஒன்றிலிருந்து வெளியேற்றம் நேரடியாக சுங்கை சிலாங்கூருக்கு சென்றதாக ஹீ கூறினார்.
முன்னதாக, சுங்கை சிலாங்கூரில் சமீபத்திய மூல நீர் மாசுபாடு சம்பவம் நீர் விநியோகத்தை பாதிக்குமா என்று பயனீட்டாளர் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது.
ரந்தாவ் பஞ்சாங் நீர் சுத்திகரிப்பு நிலையம் திங்கட்கிழமை (டிசம்பர் 7) இரவு 11.30 மணியளவில் செயல்பாட்டை நிறுத்தியதாகவும், சுங்கை சிலாங்கூர் நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் 1,2 மற்றும் 3 கட்டங்கள் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 8) அதிகாலை 1 மணிக்கு நிறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.