கோலாலம்பூர் : மனிதவளத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் கொவிட்-19 அபாயம் காரணமாக தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
கொவிட்-19 தொற்று கண்ட ஒருவருடன் நெருக்கமாகச் சந்தித்த காரணத்தால் சரவணன் அடுத்த இரண்டு வாரங்களுக்கு தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
மனிதவள அமைச்சின் மனிதவள மேம்பாட்டு நிதி வாரிய அதிகாரி ஒருவருக்கு நேற்று வியாழக்கிழமை (டிசம்பர் 10) கொவிட்-19 தொற்று பீடித்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அவருடன் நெருக்கமாகப் பழகிய காரணத்தால் தானும் கொவிட்-19 பரிசோதனையை மேற்கொண்டதாகவும் சரவணன் தெரிவித்தார்.
அந்தப் பரிசோதனையில் கொவிட்-19 தொற்று தனக்கு இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் சரவணன் தெரிவித்தார்.
தொற்று கண்ட நபருடன் சந்திப்பு நடத்தப்பட்டபோது முகக் கவசம் அணிவது உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் முறையாகப் பின்பற்றப்பட்டதாகவும் சரவணன் தெரிவித்தார்.
தனிமைப்படுத்தப்பட்டாலும், தனது அதிகாரத்துவ கடமைகள் தொடரும் என்றும் இயங்கலை வழியாக தனது பணிகளைத் தொடரவிருப்பதாகவும் சரவணன் குறிப்பிட்டார்.
இதற்கிடையில் தங்களின் ஊழியர் ஒருவருக்குத் தொற்று கண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக மனித வள மேம்பாட்டு நிதி வாரியம் அறிவித்தது.
இதைத் தொடர்ந்து மனிதவள நிதி வாரிய அதிகாரிகள் அனைவரும் கொவிட்-19 பரிசோதனைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டிருக்கிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அடுத்த ஒருவாரத்திற்கு மனிதவள மேம்பாட்டு நிதி வாரிய தலைமை அலுவலகம் ஒரு வாரத்திற்கு மூடப்படுகிறது. கிருமிநாசினி மூலம் தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.