சென்னை : நாளை டிசம்பர் 12-ஆம் தேதி நடிகர் ரஜினி காந்தின் பிறந்த நாள் கோலாகலமாகக் கொண்டாடப்படுவதோடு, இந்த முறை அவரது இரசிகர்களால் புதிய உற்சாகத்தோடும் கொண்டாடப்படுகிறது.
அரசியல் கட்சி ஒன்றைத் தோற்றுவித்து தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தலில் ரஜினி போட்டியிடவிருக்கிறார் என்ற உற்சாகம்தான் அது!
தனது போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜனிகாந்த் தமிழருவி மணியன், அர்ஜுன மூர்த்தியுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார் என ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் தனது புதிய கட்சிக்கான பதிவைச் சமர்ப்பிக்க ரஜினியின் நிர்வாகிகளும் வழக்கறிஞர்களும் இன்று புதுடில்லி சென்றுள்ளனர் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.
இதைத் தொடர்ந்து அவரது கட்சியின் பெயர் என்ன? கொடி எப்படி இருக்கும், கட்சியின் சின்னம் என்ன என்பதுபோன்ற கேள்விகள் எழுந்து, ஊடகங்கள் ஆவலுடன் காத்திருக்கின்றன.
இதைத் தொடர்ந்து ரஜினி போட்டியிடவிருக்கும் தொகுதிகள் எதுவாக இருக்கலாம் என்ற ஆரூடங்களும் எழுந்திருக்கின்றன.
ரஜினியின் பூர்வீக ஊரான கர்நாடக எல்லைப்பகுதியில் உள்ள ஓசூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகுப்பம் ஊரை உள்ளடக்கிய சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவார் என ஒரு தரப்பும், அவரது விருப்ப ஆலயம் அமைந்துள்ள திருவண்ணாமலையில் போட்டியிடக் குறிவைத்துள்ளார் என இன்னொரு தரப்பும் ஆரூடங்கள் தெரிவித்துள்ளன.