சென்னை, ஏப். 17- தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும் 4 கட்டங்களாக தேர்தல் நடத்த தமிழக அரசு முடிவு செய்தது. அதன் அடிப்படையில் கூட்டுறவு தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்டு, தேதிகளும் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலை நடத்துவதற்கு மாநில, மாவட்ட அளவிலும், அந்தந்த கூட்டுறவு சங்கங்களுக்கும் தனித்தனி தேர்தல் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டார்கள்.
தற்போது கூட்டுறவு சங்கத்தேர்தல்கள் ஜனநாயக அடிப்படையிலே நடைபெறவில்லை. கூட்டுறவு சங்கத்தேர்தலில் அடிதடி, மண்டை உடைப்பு, ரத்தக்களரி, சாலை மறியல் மற்றும் பெண்கள் மீது தாக்குதல், முறைகேடாக நடந்ததால் பல கூட்டுறவு சங்க அலுவலகங்களை பூட்டியது போன்ற விரும்பத்தகாத சம்பவங்களை வைத்து பார்க்கும்போது 100 சதவீதம் இந்த தேர்தல் முறையாக நடைபெறவில்லை என்று தெரிகிறது.
எனவே உடனடியாக தமிழக எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று, ஜனநாயகத்தை காப்பாற்றுகின்ற வகையில் இந்த அரசு கூட்டுறவு சங்க தேர்தலை ரத்து செய்து, நியாயமான, நேர்மையான முறையில் மறுதேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.