Home One Line P1 பேராக் புதிய மந்திரி பெசார் சாரனி முகமட்- அரசியல் பின்னணி என்ன?

பேராக் புதிய மந்திரி பெசார் சாரனி முகமட்- அரசியல் பின்னணி என்ன?

913
0
SHARE
Ad

“பேராக் புதிய மந்திரி பெசார் சாரனி முகமட் – பின்னணி என்ன?” என்ற தலைப்பில் கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி செல்லியல் காணொலி தளத்தில் இடம் பெற்ற காணொலியின் கட்டுரை வடிவம்:

பேராக்கின் புதிய மந்திரி பெசாராக கடந்த வியாழக்கிழமை டிசம்பர் 10-ஆம் தேதி பதவியேற்றியிருக்கிறார் சரானி முகமட். யார் இவர்? இவரது அரசியல் பின்னணி என்ன?

கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்!

மூன்று முறை மாற்றப்பட்ட பேராக் மாநில அரசாங்கம்

#TamilSchoolmychoice

2018-ஆம் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் மூன்று முறை பேராக் மாநில அரசாங்கம் மாறியிருக்கிறது. இரண்டு ஆண்டுகளில் இரண்டு மந்திரி பெசார்கள் மாறியிருக்கிறார்கள்.

14-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பக்காத்தான் ஹரப்பான் என்ற நம்பிக்கைக் கூட்டணியின் சார்பில் மந்திரி பெசாராகப் பதவியேற்றவர் அகமட் பைசால் அசுமு. ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அவரது அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து பெர்சாத்து கட்சியில் பிரதமர் மொகிதின் யாசின் அணியில் இணைந்தார் அசுமு. பெர்சாத்து இணைந்திருந்த தேசியக் கூட்டணி, பேராக் மாநிலத்தில் பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்க, மீண்டும் மந்திரி பெசாராக நியமிக்கப்பட்டார் அசுமு.

4 டிசம்பர் 2020-ஆம் தேதி அவருக்கு எதிராக பேராக் சட்டமன்றத்தில் அம்னோவால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அசுமு பதவி விலகினார்.

அதைத் தொடர்ந்து பேராக்கின் 14-வது மந்திரி பெசாராகப் பதவியேற்கும் சரானி முகமட் அம்னோவைச் சேர்ந்தவர்.

பேராக் மாநில அம்னோ தொடர்புக் குழுத் தலைவரும் ஆவார்.

4 தவணைகளாக கோத்தா தம்பான் சட்டமன்ற உறுப்பினர்

கோத்தா தம்பான் என்ற சட்டமன்றத் தொகுதியில் 4-வது தவணைகளாக தொடர்ந்து வெற்றி பெற்று வந்திருக்கிறார் சரானி. லெங்கோங் என்ற பேராக் மாநிலத்தின் கிராமப்புற நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் சட்டமன்றத் தொகுதி கோத்தா தம்பான்.

2004-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் முதன் முறையாக இங்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற சரானி தொடர்ந்து அடுத்தடுத்த பொதுத் தேர்தல்களிலும் கோத்தா தம்பான் தொகுதியை வெற்றிகரமாகத் தக்கவைத்துக் கொண்டார்.

சட்டமன்ற உறுப்பினராக இருந்திருப்பதோடு, 3 தவணைகள் பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினராகவும் வெவ்வேறு மந்திரி பெசார்களின் நிர்வாகத்தின் கீழ் பதவி வகித்து அனுபவங்களைப் பெற்றிருக்கிறார் சரானி.

நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியின்போது பேராக் மாநில சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராகவும் செயல்ப்பட்டிருக்கிறார் சரானி.

எனவே, பேராக் மாநிலத்தின் மந்திரி பெசாராகப் பதவி வகிக்க அனைத்து வகையிலும் தகுதிகளையும் அனுபவங்களையும் கொண்டவராகத் திகழ்கிறார் சரானி.

1961-ஆம் ஆண்டு மார்ச் 13-ஆம் தேதி பிறந்த சரானிக்கு இப்போது வயது 59.

மாரா தொழில்நுட்பக் கல்லூரியில் கணிதம், இயற்பியல் அதாவது பிசிக்ஸ் பாடங்களில் டிப்ளமா கல்வி கற்ற சரானி பின்னர் மனித வள நிர்வாகத்தில் திறந்தவெளி பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றார்.

சரானி முகமட் திருமணமானவர். 8 குழந்தைகளுக்குத் தந்தை.

இந்திய சமூகத்தினருடன் நெருக்கமானத் தொடர்பு கொண்டவர் சரானி

பேராக் மாநில ஆட்சிக் குழுவில் இருந்தபோது இந்தியர்களுக்காக பல நல்ல பணிகளை ஆற்றியவர் சரானி என்கின்றனர் உள்ளூர் இந்திய சமூக இயக்கங்களின் பிரதிநிதிகளும், பேராக் மாநில மஇகா பிரதிநிதிகளும்!

அம்னோவின் பேராக் மாநிலத் தலைவர் என்பதால் தேசிய முன்னணியின் வழி மஇகாவுடன் அணுக்கமானத் தொடர்புகளைக் கொண்டிருப்பவர் – இந்திய சமூகத்தின் பிரச்சனைகளை நன்கு அறிந்தவர் சரானி – என்கின்றனர் பேராக் மஇகாவினர்.

மஇகாவின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் யாரும் இல்லை என்பதால் ஆட்சிக் குழுவில் இந்தியர்கள் யாரும் இடம் பெற வாய்ப்பில்லை. எனவே, மந்திரி பெசாரின் சிறப்பு பிரதிநிதியாக இந்தியர் ஒருவரை நியமித்து பேராக் இந்தியர் விவகாரங்களை சரானி கவனித்துக் கொள்வார் என்ற எதிர்பார்ப்பு பேராக் மாநில இந்தியர்களிடையே எழுந்துள்ளது.

கடந்த காலங்களிலும் இதே போன்ற நடைமுறை பின்பற்றப்பட்டிருக்கிறது.

மிகவும் சவாலான, நெருக்கடியான காலகட்டத்தில் பேராக் மந்திரி பெசாராக நியமிக்கப்பட்டிருக்கிறார் சரானி.

இன்னும் எத்தனை மாதங்களுக்கு சரானி மந்திரி பெசாராக நீடிப்பார் என்ற கேள்வி அரசியல் பார்வையாளர்களால் முன்வைக்கப்படுகிறது.

மீண்டும் பேராக் அரசாங்கம் கவிழுமா?

பெர்சாத்துவின் 5 சட்டமன்ற உறுப்பினர்கள், பாஸ் கட்சியின் 3 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் ஆதரவோடு 25 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அம்னோ ஆட்சி அமைத்திருக்கிறது.

மொத்தமுள்ள 59 சட்டமன்றத் தொகுதிகளில் 33 தொகுதிகளின் பெரும்பான்மையில் மாநில அரசாங்கத்தை அமைத்திருக்கிறார் சரானி.

ஆனால், பெர்சாத்து கட்சியின் முதுகில் குத்திவிட்டு, அதன் மந்திரி பெசாரான அசுமுவை நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து அகற்றி விட்டு பேராக் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது அம்னோ.

எனவே, நெஞ்சில் வஞ்சம் கொண்டிருக்கும் பெர்சாத்துவும் பாஸ் கட்சியும், எந்த நேரத்திலும் தங்களின் ஆதரவை மீட்டுக் கொள்ளலாம் என்ற அச்சமும் பேராக் மாநில அரசியலில் நிலவுகிறது.

பெர்சாத்துவும், பாஸ் கட்சியும் அம்னோவுக்கான தங்களின் ஆதரவை மீட்டுக் கொண்டால் சரானி முகமட் தலைமையிலான ஆட்சி கவிழக் கூடிய அபாயம் இருக்கிறது.

ஏற்கனவே அறிவித்தபடி நம்பிக்கைக் கூட்டணி தங்களின் ஆதரவை அம்னோவுக்கு வழங்கினால் மட்டுமே சரானி முகமட் தொடர்ந்து மந்திரி பெசாராகத் தொடர முடியும்.

இல்லாவிட்டால், சரானி முகமட் மந்திரி பெசாரின் பதவியில் இருந்து விலக வேண்டும். மீண்டும் ஓர் ஆட்சி மாற்றம் பேராக்கில் நிகழக் கூடும்.

அல்லது பேராக் மாநில சட்டமன்றத் தேர்தல்கள் மீண்டும் நடத்தப்படும் சூழ்நிலையும் உருவாகலாம்.

-இரா.முத்தரசன்