வாஷிங்டன் : நாளை திங்கட்கிழமை (டிசம்பர் 14) முதல் அமெரிக்காவில் கொவிட்-19 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு போடப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து பிபைசர் தயாரிப்பு மையங்களில் இருந்து கொவிட்-19 தடுப்பூசிகள் பெரிய, பெரிய லாரிகளில் கொள்கலன்கள் மூலம் அனுப்பப்படும் படலம் தொடங்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்க அரசாங்கம் அவசர கால அடிப்படையில் இந்தத் தடுப்பூசிகளைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவின் 50 மாநிலங்களையும் இந்தத் தடுப்பூசிகள் சென்றடையும்.
சுமார் 184,275 மருந்துக் குப்பிகளைக் கொண்ட கொள்கலன் லாரிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை மிச்சிகன் மாநிலத்தின் காலாமாசு நகரில் அமைந்துள்ள பிபைசர் உற்பத்தி மையத்திலிருந்து தங்களின் முதல் கட்டப் பயணத்தைத் தொடங்கின.
திங்கட்கிழமையன்று சுமார் 145 இடங்களிலும், செவ்வாய்க்கிழமை மேலும் 425 இடங்களிலும், புதன்கிழமை 66 இடங்களிலும் இந்தத் தடுப்பூசிகள் சென்றடையும்.
இதுவரையில் சுமார் 6 நாடுகள் பிபைசர் தடுப்பூசிகளை அவசரகால அடிப்படையில் பயன்படுத்த அனுமதி வழங்கியிருக்கின்றன.
கொவிட்-19 தடுப்பூசி முதன் முதலாக பிரிட்டனில் உள்ள 90 வயது மூதாட்டி ஒருவருக்கு செலுத்தப்பட்டது.