கோலாலம்பூர் : எதிர்வரும் வாரத்திற்குள்ளாக மலேசியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் டெஸ்கோ பேரங்காடி வணிகமும், தாய்லாந்திலுள்ள அதன் வணிகங்களும் விற்பனை செய்யப்படும் உடன்படிக்கை நிறைவடையலாம் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தாய்லாந்தின் மிகப் பெரிய தனியார் நிறுவனமான சிபி ரிடேய்ஸ் டெவலெப்மெண்ட் கம்பெனி லிமிடெட் (CP Retail Development Company Ltd) என்ற நிறுவனம் 10.6 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் (மலேசிய ரிங்கிட் 43.1 பில்லியன்) டெஸ்கோ வணிகங்களை வாங்கவிருக்கிறது.
எல்லா அனுமதிகளும் எதிர்பார்த்தபடி கிடைக்கப்பெற்றால் எதிர்வரும் டிசம்பர் 18-ஆம் தேதிக்குள் டெஸ்கோவின் விற்பனை முழுமையடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பாவிலும், பிரிட்டனிலும் தங்களின் வணிக நடவடிக்கைகளில் கவனம் செலுத்த மலேசியா, தாய்லாந்தில் இயங்கும் வணிகங்களை விற்பனை செய்யப் போவதாக டெஸ்கோ கடந்த மார்ச் மாதத்தில் அறிவித்தது.
மலேசியாவில் 60-க்கும் மேற்பட்ட பேரங்காடிகளை டெஸ்கோ நடத்துகிறது. தாய்லாந்தில் டெஸ்கோ லோட்டஸ் என்ற பெயரில் 1,967 பேரங்காடிகளை டெஸ்கோ கொண்டிருக்கிறது.
சிபி குழுமம் மிகப் பெரிய அளவில் கோழி வளர்ப்புப் பண்ணைகளையும் கொண்டிருக்கும் நிறுவனமாகும்.