கோலாலம்பூர் : நாளுக்கு நாள் மலேசிய அரசியல் வானில் சில மேகங்கள் கலைவதும், சில புதிய மேகங்கள் தோன்றியும் காட்சிகள் அன்றாடம் மாறிக் கொண்டே இருக்கின்றன.
அதற்கேற்ப, பழைய அரசியல் எதிரிகளாக இருந்து அண்மையக் காலங்களில் கரம் கோர்த்திருக்கும் துன் மகாதீர் – அம்னோவின் துங்கு ரசாலி இருவரும் இணைந்து இன்று திங்கட்கிழமை பிற்பகலில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தவிருக்கின்றனர் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
அதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் என்ன சொல்லப் போகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள மலேசிய அரசியல் களம் மீண்டும் பரபரப்பு கட்டத்திற்குள் நுழைந்திருக்கிறது.
அம்னோவின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் அன்வார் இப்ராகிம் பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் மாமன்னரைச் சந்தித்து ஆட்சி அமைக்கும் உரிமையைக் கோரப்போகிறார் என ஆரூடங்கள் வெளியாகத் தொடங்கியிருக்கின்றன.
அம்னோ தலைவர் சாஹிட் இப்ராகிம், முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் ஆகியோர் இணைந்த அம்னோ நாடாளுமன்றக் குழுவினர் அன்வார் பிரதமராவதற்கு ஆதரவு தெரிவித்திருப்பதாகவும் அந்த ஆரூடங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் மகாதீரும் துங்கு ரசாலியும் இணைந்து நடத்தப் போகும் பத்திரிகையாளர் சந்திப்பில் அவர்கள் வெளியிடவிருக்கும் அதிரடி அறிவிப்புகள் என்ன என்பதைத் தெரிந்து அரசியல் பார்வையாளர்களும் ஊடகவியலாளர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.