Home One Line P1 “நாளையே அரசாங்கம் வாக்கெடுப்பில் தோல்வியடையலாம்” மகாதீர்

“நாளையே அரசாங்கம் வாக்கெடுப்பில் தோல்வியடையலாம்” மகாதீர்

626
0
SHARE
Ad

கோலாலம்பூர் : பெஜூவாங் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான  துன் மகாதீர், அம்னோவின் குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினர் துங்கு ரசாலியுடன் இணைந்து இன்று மாலை நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் நாளை வரவு செலவுத் திட்டம் மீதான 3-வது வாக்கெடுப்பில் அரசாங்கம் தோல்வியடையலாம் எனத் தெரிவித்தார்.

எனவே, வாக்கெடுப்பில் அரசாங்கம் தோல்வியடைந்தால் அதைத் தொடர்ந்து நடப்பு அரசாங்கமும் பிரதமரும் பதவியிலிருந்து விலக வேண்டும், புதிய அரசாங்கம் அமைய வேண்டும் எனவும் மகாதீர் கூறினார்.

இதற்கிடையில் நாளை நடைபெறவிருக்கும் 3-வது சுற்று இறுதி வாக்கெடுப்பில் தான் கலந்து கொள்ளப் போவதில்லை என துங்கு ரசாலி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“தற்போது அரசாங்கம் சட்டவிரோதமான அரசாங்கம். தற்போதிருக்கும் பிரதமரும் சட்டவிரோதப் பிரதமர். எனவே, சட்டவிரோத அரசாங்கம் கொண்டு வரும் வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளப் போவதில்லை” என துங்கு ரசாலி உறுதிப்படுத்தினார்.

நாளைய வாக்கெடுப்பில் அரசாங்கம் தோல்வியடைந்தால் பிரதமராக பதவியேற்க முன்வருவீர்களா என மகாதீரிடம் கேட்கப்பட்டது.

“நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆதரித்தால் இப்போதே நான் பிரதமராகத் தயார்” எனவும் மகாதீர் பலத்த சிரிப்பொலிகளுக்கிடையில் தெரிவித்தார்.

“நாங்கள் இருவரும் (துங்கு ரசாலி) கட்சி அடிப்படைகளுக்கு அப்பாற்பட்டு செயல்பட விரும்புகிறோம். கட்சியின் அடிப்படையிலேயே நாம் செயல்பட்டுக் கொண்டிருப்பதால் நாட்டு நலனையும், மக்கள் நலனையும் நாம் மறந்து விடுகிறோம்” என மகாதீர் குறிப்பிட்டார்.

இத்தகைய அறிவிப்பின் மூலம், அரசாங்க சார்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி கட்டுப்பாடுகளின்றி சுதந்திரமாக வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக மறைமுக அறைகூவலை மகாதீரும், துங்கு ரசாலியும் விடுத்திருக்கின்றனர் எனக் கருதப்படுகிறது.

மகாதீர் – துங்கு ரசாலி இணைந்த பத்திரிகை சந்திப்பு

பத்திரிகையாளர் சந்திப்பின் தொடக்கத்தில் உரையாற்றிய மகாதீர் அரசாங்கத்தில் நீண்ட காலமாக அமைச்சராகவும், பிரதமராகவும் பணியாற்றி அனுபவம் பெற்றவர்கள் என்ற முறையில் நாட்டின் அரசியல், பொருளாதார சிக்கலைத் தீர்க்க தாங்கள் இருவரும் கரம் கோர்க்க முன்வந்திருப்பதாகத் தெரிவித்தனர்.

பின்னர் உரையாற்றிய துங்கு ரசாலி, மகாதீர் 7-வது பிரதமரான பின்னர் அவருடன் இணைந்து அவரது தலைமையில் கலந்து கொள்ளும் முதல் பத்திரிகையாளர் சந்திப்பு இது எனத் தெரிவித்தார்.

“தற்போதுள்ள அரசாங்கம் பெரும்பான்மையில்லாத அரசாங்கம். நிலையில்லாத அரசாங்கம். இலக்கில்லாமல் செயல்படுகிறது. மக்கள் பல வகைகளிலும் சிரமப்படுகின்றனர். அன்றாடம் தொழில் செய்பவர்கள் ஒருநாள் வேலை செய்யாவிட்டால் மறு நாள் மேசையில் உண்ண உணவின்றித் தவிக்கின்றனர். நமது நாட்டில் உணவில்லாமல் யாரும் கஷ்டப்படக் கூடாது. காரணம், நமது நாடு எல்லா இயற்கை வளங்களும், செழிப்பும் உள்ள நாடு. நமது நாட்டை மீண்டும் “ஆசியாவின் புலி” என்ற பழைய பட்டப் பெயரைப் பெற நாம் பாடுபட வேண்டும்” எனவும் துங்கு ரசாலி கேட்டுக் கொண்டார்.

“இன்று தொடங்கும் எங்களின் கூட்டான பயணம் ஒரு புதிய தொடக்கம்” என்றும் துங்கு ரசாலி தெரிவித்தார்.