Home One Line P1 “வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிப்போம்” – நம்பிக்கைக் கூட்டணி அறிவிப்பு

“வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிப்போம்” – நம்பிக்கைக் கூட்டணி அறிவிப்பு

453
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நாளை புதன்கிழமை (டிசம்பர் 15-ஆம் தேதி) 2021 வரவு செலவுத் திட்டம் மீதான மூன்றாவது சுற்று இறுதிக் கட்ட வாக்களிப்பு நடைபெறும்போது அந்தத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்துத் தோற்கடிக்க வேண்டுமென தங்கள் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பக்காத்தான் ஹரப்பான் என்ற நம்பிக்கைக் கூட்டணி உத்தரவிட்டுள்ளது.

பிகேஆர் கட்சியின் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன், அமானா கட்சியின் தலைமைச் செயலாளர் ஹட்டா ரம்லி, ஜசெகவின் தலைமைச் செயலாளர் அந்தோணி லோக் ஆகிய மூவரும் கையெழுத்திட்ட அறிக்கையின் மூலம் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

நாளை வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுக்கும்போது எண்ணிக்கை அடிப்படையிலான வாக்கெடுப்புக்கு கோரிக்கை விடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கை தெரிவித்தது.

#TamilSchoolmychoice

இதே போன்றதொரு நிலைப்பாட்டை துன் மகாதீரும் இன்று துங்கு ரசாலியுடன் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவித்தார்.

நாளை நடைபெறும் வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பில் அரசாங்கம் தோல்வியடைந்து கவிழும் என்றும் மகாதீர் தெரிவித்தார்.

தற்போதைய நிலவரப்படி, மொகிதின் யாசினுக்கு 112 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகக் கருதப்படுகிறது.

நம்பிக்கைக் கூட்டணி 91 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பலத்தையும் மகாதீர் அணியினர் 4 உறுப்பினர்களின் பலத்தையும் கொண்டிருக்கின்றனர்.

ஆக 95 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பலத்தைக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சிக் கூட்டணியில் இதுவரையில் சபாவின் வாரிசான் சபா இணையவில்லை. அவர்களின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்தால் எதிர்க்கட்சிகளின் பலம் 103 ஆக உயரும்.

துங்கு ரசாலி ஹம்சா வரவு செலவுத் திட்டம் மீதான வாக்களிப்பில் கலந்து கொள்ளப் போவதில்லை என அறிவித்து விட்டார்.

இந்நிலையில் சில அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களோ, சபா, சரவாக் நாடாளுமன்ற உறுப்பினர்களோ இணைந்து வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களித்தால் அந்தத்திட்டம் தோல்வியடைந்து அரசாங்கம் கவிழும்.