கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசினுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மக்களவையில் தாக்கல் செய்யப்படாத வரை 2021 வரவு செலவு திட்ட விவாதத்தில் பங்கேற்கப்போவதில்லை என்று துங்கு ரசாலி ஹம்சா தெரிவித்துள்ளார்.
மக்களவை சபாநாயகர் அசார் அசிசான் ஹருணுக்கு எழுதிய கடிதத்தில், குவா முசாங் நாடாளுமன்ற உறுப்பினரான அவர், இதனைத் தெரிவித்துள்ளார்.
துங்கு ரசாலி சமர்ப்பித்த தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவருவதா என்பதை சட்டத் துறை அமைச்சர் தக்கியுடின் ஹாசான்தான் முடிவு செய்ய வேண்டும் என்று அசார் அசிசான் கூறியிருந்தார்.
அசாரின் இந்த முன்மொழிவு மத்திய அரசியலமைப்பின் 43- வது பிரிவை மீறியதாகவும், ஆதாரமற்றது என்றும் துங்கு ரசாலி கூறினார். ஏனெனில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டால் அதனால் தக்கியுடின் தரப்பும் பாதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
“எனது கருத்துப்படி, நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்யலாமா இல்லையா என்பதை தீர்மானிப்பதில் தக்கியுடினுக்கு எந்தப் பங்கும் இல்லை,” என்று அவர் நவம்பர் 19 தேதியிட்ட கடிதத்தில் அசாருக்குத் தெரிவித்தார்.
அவர் கொண்டுவந்த தீர்மானம் தனிநபர் தீர்மானம் என்ற அசாரின் நிலைப்பாட்டையும் ரசாலி நிராகரித்தார். தனிநபர் தீர்மானம் என்பது அரசாங்கத்தால் அனுமதி வழங்கப்பட்டால் மட்டுமே தாக்கல் செய்ய முடியும்.
அக்டோபர் 14-ஆம் தேதி, அசார், துங்கு ரசாலி, தக்கியுடினுடன் பேச்சுவார்த்தை நடத்தி தனிநபர் தீர்மானங்களுக்கு முன்னுரிமை அளிக்க அனுமதிக்குமாறு பரிந்துரைத்தார்.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை உடனடியாக தாக்கல் செய்வதைத் தடுக்கக்கூடிய மக்களவையின் விதி எதுவும் இல்லை என்றும், எனவே அது “அடுத்த அமர்வில் விவாதிக்கப்பட வேண்டும்” என்றும் துங்கு ரசாலி தனது கடிதத்தில் வலியுறுத்தினார்.
தேசிய கூட்டணி அரசாங்கத்தின் பெரும்பான்மையை நிரூபிக்க, அசார் அனுமதிக்காத வரை, துங்கு ரசாலி 2021 வரவு செலவு திட்ட விவாதத்தில் பங்கேற்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.