கோலாலம்பூர்: 2018-ஆம் ஆண்டில் காவல் துறை தடுப்புக் காவலில் இருந்த போது மரணமுற்ற தனபாலன் சுப்ரமணியத்தின் (38), மரணத்திற்கு காவல் துறைதான் பொறுப்பேற்க வேண்டும் என மரண விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
காவல் துறையின் அலட்சியத்தால் தனபாலன் மரணமுற்றதாக நீதிபதி தெரிவித்ததாக வழக்கறிஞர் எம். விஸ்வநாதன் எப்எம்டியிடம் கூறினார்.
தனபாலன் ஷா ஆலாம் மாவட்ட காவல் தலைமையகத்தில் அல்லது மருத்துவமனைக்கு செல்லும் போது இறந்திருக்கலாம் என்று நீதிபதி ரோபியா முகமட் மேலும் கூறினார்.
தனபாலனுக்கு லெப்டோஸ்பிரோசிஸ் இருப்பது கண்டறியப்பட்டதாக விஸ்வநாதன் கூறினார். அவரது இதய பிரச்சனைக் காரணமாக அவரது நிலை மோசமடைந்தது.
“காவல் துறையினர் அவருக்கு உடல் நலம் சரியில்லை என தெரிந்தும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லவில்லை,” என்று அவர் கூறினார்.
தனபாலன் மரணம் தொடர்பான விசாரணை 2019- இல் தொடங்கியது. 14- வது பொதுத் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு தனபாலன் 2018-இல் ஏப்ரல் 17 அன்று இறந்தார்.
பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் அல்லது சொஸ்மாவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தனபாலன், ஷா ஆலாம் காவல் துறை தலைமையகத்திலிருந்து, கொண்டு செல்லப்பட்ட பின்னர் மருத்துவமனையில் இறந்தார்.