Home One Line P1 கொள்கையுடன் இருந்தால் அம்னோ அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும்

கொள்கையுடன் இருந்தால் அம்னோ அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும்

449
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அம்னோ இப்போது எதிர்க்கட்சியைப் போல பார்க்கப்படுவதாக லிம் குவான் எங் கூறினார். ஆனால், அக்கட்சி தேசிய கூட்டணி அரசாங்கத்துடன் இருக்கும் வரை அது கொள்கையுடன் இருப்பதாகக் கருதப்படாது என்று அவர் குறிப்பிட்டார்.

தேசிய கூட்டணி, பெர்சாத்துவுக்கு எதிராக அம்னோ களம் இறங்குவதை அறிந்து மொகிதின் யாசின் பதிலளித்திருக்க வேண்டும் என்றும் லிம் கூறினர்.

“அம்னோ ஒரு கொள்கை ரீதியான கட்சி என்றால், அவர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேறியிருக்க வேண்டும், அல்லது மொகிதின் அரசாங்கத்தை எதிர்த்ததற்காக அம்னோவை நீக்கியிருக்க வேண்டும்,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

தேசிய கூட்டணியின் இப்போதைய நிலைமை என்னவென்றால், அம்னோவை தொடர்ந்து நம்புவதைத் தவிர வேறு வழியில்லை என்பதைக் காட்டுகிறது என்று அவர் கூறினார்.

“இருப்பினும், அம்னோ இன்னும் அரசாங்கத்தில் இருப்பது மொகிதின் நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மையின் ஆதரவை இழந்துவிட்டார் என்பதற்கான தெளிவான உண்மையை காட்டுகிறது. மேலும் அதன் பலவீனமான சக்தியைத் தக்க வைத்துக் கொள்ள அவருக்கு அம்னோ தேவை,” என்று பாகான் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் கூறினார்.

மொகிதினுக்கான ஆதரவு தொடர்ந்து கேள்விக்குறியாகி வரும் சூழ்நிலையில், சில மூத்த அம்னோ தலைவர்கள், ஈபிஎப் நிதியை திரும்பப் பெறுதல் போன்ற பல விஷயங்களில் அரசாங்கத்தை தீவிரமாக விமர்சிப்பதைக் காணலாம்.

பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் பிரதமராக பதவியேற்க அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து முன்னாள் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அனுவார் மூசா கூறிய குற்றச்சாட்டுகளால் இது மீண்டும் சூடுபிடித்துள்ளது.

தேசிய கூட்டணியை வீழ்த்த அம்னோவின் சில உறுப்பினர்கள் ஜசெக உடன் ஒத்துழைக்க முயற்சிப்பதாகவும் அனுவார் கூறினார்.

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் உட்பட கட்சியின் மூத்த தலைவர்கள் பலரால் தேசிய கூட்டணி மீதான அம்னோவின் தாக்குதல் கணிசமாக மேற்கொள்ளப்பட்டது என்று லிம் கூறினார்.

இருப்பினும், அத்தகைய சூழ்நிலையில், அம்னோ இன்னும் தேசிய கூட்டணி தலைமையிலான அரசாங்கத்துடன் இருக்கிறது.