கோலாலம்பூர் : ஆளும் தேசியக் கூட்டணியின் ஓர் அங்கமாக அம்னோ திகழ்ந்தாலும், ஏற்கனவே குவா மூசாங் அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர் துங்கு ரசாலி ஹம்சா தேசியக் கூட்டணிக்கான தனது ஆதரவை மீட்டுக் கொள்வதாக பகிரங்கமாக அறிவித்தார்.
இன்று மாச்சாங் (கிளந்தான்) நாடாளுமன்ற உறுப்பினரான அகமட் ஜஸ்லான் யாக்கோப் தேசியக் கூட்டணிக்கான ஆதரவை மீட்டுக் கொள்வதாக அறிவித்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து 222 உறுப்பினர்களைக் கொண்ட மலேசிய நாடாளுமன்றத்தில் தேசியக் கூட்டணியின் பலம் தற்போது 110 ஆக சுருங்கியுள்ளது.
இன்னும் 2 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்கள் நடத்தப்படவில்லை. இதனால் மொத்தமுள்ள 220 நாடாளுமன்ற உறுப்பினர்களில் சரிபாதி உறுப்பினர்களை மட்டுமே தேசியக் கூட்டணி தற்போது கொண்டிருக்கிறது.
தொடர்ந்து மேலும் சில அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு தங்களின் ஆதரவை மீட்டுக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று கோத்தாபாருவில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அகமட் ஜஸ்லான் தனது முடிவை அறிவித்தார்.
ஏற்கனவே மலேசிய செம்பனை வாரியத்தின் தலைவர் பதவியிலிருந்து ஐந்து நாட்களுக்கு முன்னர் அகமட் ஜஸ்லான் விலகினார்.