Home One Line P1 கொவிட்-19: நிலை 1, 2 நோயாளிகள் வீட்டிலேயே சிகிச்சைப் பெறுவர்

கொவிட்-19: நிலை 1, 2 நோயாளிகள் வீட்டிலேயே சிகிச்சைப் பெறுவர்

443
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நிலை 1 மற்றும் 2 கொவிட் -19 நோயாளிகள் வீட்டிலேயே சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுவார்கள். அதே நேரத்தில் சுகாதார ஊழியர்களால் கண்காணிக்கப்படுவார்கள் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் அடாம் பாபா தெரிவித்தார்.

வீட்டிலேயே சிகிச்சை பெறும் நோயாளிகளைக் கண்காணிக்க நெருக்கடி தயார்நிலை மற்றும் அவசரகால தகவல் மையம், மாநில மற்றும் மாவட்ட மட்டங்களில் ஒரு பணிக்குழுவை அமைக்கும் என்று அவர் கூறினார்.

இருப்பினும், அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகள் வழக்கமான கண்காணிப்புடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவார்கள் என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“நேர்மறையான சம்பவங்களுக்கு சிகிச்சையளிப்பதில், தனிமைப்படுத்துவதில் நாங்கள் வேகமாக செயல்பட வேண்டியிருப்பதால் நாங்கள் இதைச் செய்கிறோம். இந்த நோக்கத்திற்காக, கொவிட் -19 தொற்றைக் கட்டுப்படுத்த தொடர்பில் இருந்தவர்களை அமைச்சகம் கண்டறியும், ” என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

நிலை 1 மற்றும் 2 நோயாளிகள் 10 நாட்களுக்கு வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும், கடைசி நாளில் அவர்கள் மீது பரிசோதனை நடத்தப்படும் என்றும் அடாம் கூறினார்.

“பரிசோதனை அவர்களின் வீடுகளில் செய்யப்படும். இதன் விளைவாக எதிர்மறையாக இருந்தால், அவர்கள் கொவிட் -19 இலிருந்து விடுபடுவார்கள்,” என்று அவர் கூறினார்.

இதுபோன்ற நோயாளிகளை வீட்டிலேயே சிகிச்சையளிக்க அனுமதிப்பதற்கு முன்பு அமைச்சின் ஊழியர்கள் வீட்டின் அளவு மற்றும் குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை மதிப்பிடுவார்கள் என்று அமைச்சர் கூறினார். வீடு சிறியதாகவோ அல்லது கூட்டமாகவோ இருந்தால், நோயாளிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவார்கள்.

ஜனவரி 5-ஆம் தேதி, சுகாதார இயக்குனர், நூர் ஹிஷாம், கொவிட் -19 நோயாளிகளை அறிகுறிகள் இல்லாமல் அல்லது வீட்டில் இலேசான அறிகுறிகளுடன் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதை அமைச்சகம் பரிசீலித்து வருவதாகக் கூறியிருந்தார்.