கோலாலம்பூர்: முன்னாள் அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்கள் உட்பட 21 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு, உணவகங்களை இரவு 8 மணி வரை இயக்கும் கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
ஒரு கூட்டு அறிக்கையில், இந்த உணவகங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட உரிமங்களில் நிர்ணயிக்கப்பட்ட நேரம் வரை செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இந்த விதிமுறையின்படி உணவகங்களில் உணவருந்த அனுமதி இல்லை. உணவுகளை எடுத்துச் செல்ல மட்டுமே அனுமதி உள்ளது. உணவு வாங்குவது காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமேஅனுமதிக்கப்படுகிறது.
இந்த வளாகங்களை செயல்பட அரசாங்கம் அனுமதித்த காலம், வேலை நேரத்திற்குப் பிறகு மக்களுக்கு உணவு வாங்குவது கடினம் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த அறிக்கையில் முன்னாள் அமைச்சர்கள் டேரல் லெய்கிங், சைட் சாதிக், காலிட் சமாட் மற்றும் தெரசா கோக், முன்னாள் துணை அமைச்சர்கள் அசிஸ் ஜம்மான், டாக்டர் லீ பூன் சாய் மற்றும் ஹன்னா இயோ ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
இதுபோன்ற வியாபாரங்களை நடத்துபவர்களின் வருமானத்தை பாதிக்கும் என்பதால், இயக்க நேரத்தை மாற்றியமைக்க தேசிய பாதுகாப்பு மன்றத்திடம் இந்த குழு வலியுறுத்தியுள்ளது. வங்கிக் கடன்களுக்கான தள்ளுபடியை ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்றும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.