கோலாலம்பூர்: உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடினின் உடல் நிலை சீரான நிலையில் இருப்பதாக அவரது அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது.
அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும், அவர் தீவிர சிகிச்சையில் உள்ளதாகவும் செய்திகள் வெளியானதை அடுத்து இந்த செய்தி வெளியிடப்பட்டது.
“ஹம்சா தற்போது யுனிவர்சிட்டி மலாயா மருத்துவ மையத்தில் சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளார். அவரது உடல்நிலை சீரான நிலையில் உள்ளது,” என்று அமைச்சர் அலுவலகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஜனவரி 11 அன்று ஹம்சா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அப்போது அவர் தொற்றுக்கு ஆளாகி இருந்தது தெரியவந்தது.
பொருளாதார விவகார அமைச்சர் முஸ்தபா முகமட், பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் ரினா ஹருன் மற்றும் தேசிய ஒற்றுமை அமைச்சர் ஹலிமா முகமட் சாதிக் ஆகிய மூன்று அமைச்சர்களும் இந்த மாதத்தில் கொவிட் -19 தொற்றுக்கு ஆளாகினர்.
இன்று முன்னதாக, பாசிர் சாலாக் நாடாளுமன்ற உறுப்பினர் தாஜுடின் அப்துல் ரஹ்மான் கொவிட்-19 தொற்றுக்கு ஆளானதாகத் தெரிவிக்கப்பட்டது.