சென்னை: மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்பட உள்ளது.
இதனை 2017-இல் ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அப்போது, போயஸ் கார்டன் வீட்டை அரசு கையகப்படுத்தியது. அதனை நினைவு இல்லம் மாற்றுவதற்கு இழப்பீடாக தமிழக அரசு சார்பில் 68 கோடி ரூபாய் செலுத்தப்பட்டு ஜெயலலிதா வாழ்ந்த இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டது.
ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவிடமாக மாற்றும் பணியை பொதுப் பணித்துறை மேற்கொண்டு வருகிறது. இப்பணியின் ஒரு பகுதியாக வீடு முழுவதும் வண்ணம் அடிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் வீட்டில் எந்தெந்த பொருட்களை எங்கெங்கு வைக்கலாம் என்பது குறித்தும் பேசப்பட்டு வருகிறது.
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள், அவர் பயன்படுத்திய பொருட்கள், படித்த புத்தகங்கள், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் போயஸ் கார்டன் இல்லம் பொதுமக்கள் பார்வைக்காக வரும் 28-ஆம் தேதி திறக்கப்பட உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.