கோலாலம்பூர்: பொது இடங்களில் அல்லது பொருட்கள் வாங்கும் போது யாரும் கையுறை அணிவது கட்டாயமில்லை என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெளிவுபடுத்தியுள்ளார்.
கையுறைகள் அணியாததற்காக ஒரு கடைக்காரருக்கு அபராதம் வழங்கும் ஒரு காவல் துறை அதிகாரியின் காணொலி பரவலாகி வந்ததை அடுத்து அவரது அறிக்கை வந்துள்ளது.
காணொலியில், காவல் துறை அதிகாரி கடைக்காரரைக் கண்டிப்பதும், அபராதம் விதிப்பதற்கு முன்பு உடனடியாக கையுறைகளை அணியுமாறு அறிவுறுத்துவதையும் காணலாம். அபராதம் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை.
“கையுறை அணியும் நடைமுறை இல்லை!” காணோலிக்கு பதிலளிக்கும் விதமாக இஸ்மாயில் ஒரு குறு டுவிட்டர் பதிவில் கூறினார்.
இதற்கிடையில், புத்ராஜெயா மாவட்ட காவல் துறைத் தலைவர் முகமட் பாட்சில் அலி, அந்த பெண் கையுறை அணியவில்லை என்பதற்காக அபராதம் விதிக்கப்படவில்லை, ஆனால், மற்ற நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளுடன் இணங்கத் தவறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டதாக கூறினார்.