கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றால் ஏற்பட்ட மனச்சோர்வு காரணமாக, முதியவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக நம்பப்படுகிறது.
இந்த சம்பவம் செரி கெம்பங்கான், பண்டார் புத்ரா பெர்மாயில் உள்ள அவரது வீட்டில் நேற்று நடந்ததாக காவல் துறை அறிவித்தது.
செர்டாங் மாவட்ட குற்றவியல் புலனாய்வு பிரிவு தலைவர் முகமட் அக்மால்ரிசால் ராட்ஸி கூறுகையில், 66 வயதான அந்நபர் ஜனவரி 7 மற்றும் 18 ஆகிய தேதிகளில் இரண்டு கொவிட் -19 பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார் என்று கூறினார். அதில் இரு முறையும் அவர் தொற்றுக்கு ஆளாகி இருந்தது தெரியவந்துள்ளது.
“ஜனவரி 22- ஆம் தேதி பாதிக்கப்பட்டவர் தனது மனைவியுடன், கொவிட் -19 சிகிச்சைக்காக 40,000 ரிங்கிட்டை செலுத்த வங்கிக்கு செல்லுமாறு அழைத்திருந்தார். அவரது மனைவியின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவர் அடிக்கடி வலியைப் பற்றி புகார் செய்ததாகவும், மேலும் கொவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டபோது மனச்சோர்வடைந்த நிலையில் இருந்ததாக்வும் கூறினார். பாதிக்கப்பட்டவர் அடிக்கடி தனது மனைவியிடம் இதுபோன்ற நோய்வாய்ப்பட்டிருப்பதை விட இறப்பது நல்லது என்று கூறியுள்ளார்,” என்று அதிகாரிகள் ஓர் அறிக்கையில் தெரிவித்தனர்.
இதற்கிடையில், சம்பவ இடத்தில் ஆரம்ப விசாரணையில் எந்தவொரு குற்றவியல் கூறுகளும் கிடைக்கவில்லை, மேலும், அவர் தற்கொலை செய்து கொண்டதாக நம்பப்படுகிறது என்று முகமட் அக்மால்ரிசால் கூறினார்.
“மேலும் விசாரணைகள் முடியும் வரையில், இந்த வழக்கு திடீர் மரணமாக நிலுவையில் இருக்கும்,” என்று அவர் மேலும் கூறினார்.