Home One Line P1 “கெடா மந்திரி பெசார் முடிவுகளால் இந்திய மகளிர் கடும் அதிருப்தி” -மஇகா மகளிர் பிரிவு கண்டனம்

“கெடா மந்திரி பெசார் முடிவுகளால் இந்திய மகளிர் கடும் அதிருப்தி” -மஇகா மகளிர் பிரிவு கண்டனம்

579
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கெடாவில் தைப்பூசத்தை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்படாது என அதன் மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நோர் அறிவித்ததை அடுத்து, மஇகா தேசிய மகளிர் பிரிவு துணைத் தலைவி விக்னேஸ்வரி பாபுஜி தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட செய்தி அறிக்கை கீழ் வருமாறு:

அண்மையக் காலமாக கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி மேற்கொண்டு வரும் முடிவுகள் இந்திய சமூகத்தினரிடையே குறிப்பாக இந்திய மகளிர் சமூகத்தில் கடும் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் உருவாக்கியிருக்கிறது.

#TamilSchoolmychoice

அண்மையில் தைப்பூச விடுமுறையை கெடா மந்திரி பெசார் இரத்து செய்தது இந்தியப் பெண்களிடையே, பாஸ் கட்சி மீதான தோற்றத்தைக் கடுமையாகப் பாதித்துள்ளது. இந்தியப் பெண்களிடையே நாடு முழுமையிலும் எந்தப் பக்கம் திரும்பினாலும் கெடா மந்திரி புசார் குறித்த முடிவுகள் குறித்த ஏமாற்றத்தையும் அதிருப்தியும் வெளிப்படுத்தப்பட்டு வருவதைக் கண்டு வருகிறோம்.

தைப்பூசம் என்பது இந்துப் பெண்மணிகளின் இதயங்களோடு மிக நெருங்கிய தொடர்புடைய ஒரு திருவிழாவாகும். தைப்பூசத்தை இந்துப் பெண்கள் சமய முறைப்படி ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர்.

ஒவ்வொரு தைப்பூசத்தின் போதும் இரத ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் பால்குடம் ஏந்தி அதிகாலை நேரத்தில் மணிக்கணக்காக பல மைல் தூரம் நடந்து வரும் காட்சிகளை நாம் காணலாம்.

ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழாவில் காவடிகள் எடுப்பவர்களில் ஏறத்தாழ பாதிப்பேர் பெண்களாவர். பல குடும்பங்களில் பெண்கள் தைப்பூச மாதத்தில் விரதம் இருப்பதும் வழக்கம். பலர் சுமார் ஒரு மாதம் வரை விரதம் இருக்கும் வழக்கத்தை கடைப்பிடிக்கின்றனர்.

கெடா மாநிலத்தில் ஆலைய உடைப்பு விவகாரம் இந்துக்களிடையே பரவலான வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் தைப்பூச விடுமுறையை இரத்து செய்தது இந்துபெண்களிடையே கடும் கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. காரணம் இதனால் ஆண்டுதோறும் அவர்கள் பின்பற்றி வந்த சமய நடைமுறைகளுக்கு பாதிப்பும் இடையூறுகளும் ஏற்பட்டிருக்கின்றன.

தைப்பூசக் கொண்டாட்டத்திற்கு ஆலயங்களில் அனுமதி இல்லை என்றாலும் பல இந்துப் பெண்கள் தைப்பூசம் தொடர்பான தங்களது விரதங்கள், சமய பாரம்பரிய நடைமுறைகளை இல்லத்தில் இருந்தபடியே பின்பற்றி வருகின்றனர்.

இதனால் நாடு தழுவிய அளவில் இந்துப் பெண்கள், கெடா மந்திரி புசார் தைப்பூச விடுமுறையை இரத்து செய்தது குறித்து தங்களின் அதிர்ச்சியை எங்களிடம் வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் எங்களின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் ஒரு நல்லெண்ண நகர்வாக, பாஸ் தலைமைத்துவத்துடன் சந்திப்புகள் நடத்தினார். இஸ்லாமிய சார்புடைய கொள்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஓர் இஸ்லாமிய கட்சியுடன் மதநல்லிணக்கத்தை உருவாக்கும் சிறந்த நோக்கத்துடன் எங்களின் தேசியத் தலைவர் அந்த நல்லெண்ண முடிவை எடுத்தார்.

அந்த முடிவுக்கு எங்களின் மஇகா கட்சியினரிடம் இருந்து கூட பல எதிர்ப்புகள் எழுந்தன. பாஸ் கட்சியுடன் நெருங்கிய அரசியல் உறவை வைத்துக் கொள்ளும் மஇகா தலைமைத்துவத்தின் முடிவு இந்தியர் வாக்குகளை பொதுத் தேர்தலில் இழக்கும் அபாயத்தை கொண்டுவரலாம் என பல அரசியல் பார்வையாளர்களும் எச்சரித்தனர்.

எனினும், எங்களின் தேசியத் தலைவரும் மற்ற மஇகா தலைவர்களும் பாஸ் தலைவர்களின் உறுதிமொழிகளை நம்பி தொடர்ந்து அந்தக் கட்சியுடன் நல்லிணக்க உறவுகளை ஏற்படுத்த முயற்சிகள் செய்தனர். குறிப்பாக பாஸ் கட்சித்தலைவர் டத்தோஸ்ரீ ஹாஜி ஹாடி அவாங் “தமது கட்சி அனைத்து மதங்களையும், குறிப்பாக இந்து மதத்தையும் சமமாக பாவிக்கும்” என உறுதியளித்தார்.

அந்த வார்த்தைகளை நம்பி மஇகா தலைமைத்துவம் தங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து பாஸ் கட்சியோடு ஒத்துழைத்தது. கடந்தகால மரபுகளுக்கு மாறாக பாஸ் கட்சியின் தேசிய மாநாட்டிலும் பங்கு பெற்றது.
ஆனால் இப்பொழுது முகமட் சனுசி என்ற ஒரு தனி மனிதன் கெடா மந்திரி புசார் என்ற தனது பதவியைப் பயன்படுத்தி தனது ஓரிரண்டு முடிவுகளால் இத்தனை ஆண்டுகளாக மஇகா கடுமையாக பாடுபட்டு உருவாக்கிய அரசியல், மத நல்லிணக்க உறவுகளை அப்படியே உடைத்து நொறுக்கி விட்டார்.

இந்த விவகாரத்திலும் சரி – எதிர்வரும் 15-வது பொதுத் தேர்தல் காலகட்டத்திலும் சரி – எங்களின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் பாஸ் கட்சி குறித்து எடுக்கும் எந்த முடிவுக்கும் மஇகா மகளிர் பிரிவினராகிய நாங்கள் முழு மனதோடு கட்டுப்பட்டு பின்பற்றுவோம்.

அதேவேளையில் இந்திய சமுதாயத்தின் உணர்வுகளை மதிக்காத – இந்திய சமுதாயத்தின் நடப்பு எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் எதிராக எடுக்கப்படும் – எந்த ஒரு முடிவுக்கும் தொடர்ந்து எங்களின் கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருவோம் என்பதையும் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.