கோலாலம்பூர்: மலேசியாவுடனான பரஸ்பர பச்சை வழி (Reciprocal Green Lane- RGL) ஒப்பந்தத்தை சிங்கப்பூர் நிறுத்தி வைத்துள்ளது.
கொவிட் -19 சம்பவங்களை இறக்குமதி செய்வதற்கான ஆபத்து குறித்த மதிப்பாய்வின் ஒரு பகுதியாக, சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சகம் இன்று காலை இந்த அறிவிப்பை வெளியிட்டது.
ஆர்.ஜி.எல் என்பது மலேசியாவிற்கும், சிங்கப்பூருக்கும் இடையிலான பயணக் ஒப்பந்தமாகும். இது பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தப்படுத்துதல் தேவைகள் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளின் கீழ், இரு நாடுகளுக்கும் இடையில் பயணிக்க மக்களை அனுமதிக்கிறது.
ஜெர்மனி மற்றும் தென் கொரியாவுடனான அனுமதியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த இடைநீக்கம் பிப்ரவரி 1 முதல் நடைமுறைக்கு வந்து மூன்று மாதங்களுக்கு நீடிக்கும். இருப்பினும், ஆர்.ஜி.எல்- இன் கீழ் பயணத்திற்கு ஏற்கனவே ஒப்புதல் பெற்றவர்களுக்கு, அவர்கள் தொடர்ந்து அவ்வாறு செய்யலாம் என்று அது கூறியுள்ளது.
மலேசியா நேற்று 5,725 புதிய கொவிட் -19 சம்பவங்களுடன் 200,000-க்கும் மேற்பட்ட மொத்த சம்பவங்களைப் பதிவு செய்தது.