(கடந்த ஜனவரி 28-ஆம் தேதி காலமான வணிகப் பெருமகனார் வி.எல்.கோடிவேல் குறித்த சில நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)
1978-ஆம் ஆண்டு இறுதியில் மறுசீரமைக்கப்பட்ட மஇகா செந்துல் கிளையின் முதலாவது தேர்தல் கூட்டத்தில்தான் கோடிவேல் என்ற பெயர் எனக்கு அறிமுகமானது.
செந்துல் வட்டாரத்தில் வசித்ததால் அந்தக் கிளையில்தான் நான் முதன் முதலில் உறுப்பினராக இணைந்தேன்.
அப்போதைய மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் தலைமையில் மஇகா எவ்வளவு ஜனநாயக ரீதியில் இயங்கியது என்பதற்கு ஓர் உதாரணம் அன்றைய செந்துல் கிளைத் தேர்தல்.
செந்துல் தமிழ்ப் பள்ளியில் சுமார் இரண்டு வார காலத்திற்கு அந்தக் கிளைக்கான உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.
யார் வேண்டுமானாலும் அங்கு சென்று தங்களின் அடையாள அட்டையைக் காட்டி 4 ரிங்கிட் செலுத்தி உறுப்பினராகிக் கொள்ளலாம். அவ்வாறு உறுப்பினராக சேர்ந்தவர்கள் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட செந்துல் வாசிகள்.
அவர்களில் நானும் ஒருவன்!
1978 ஆண்டின் இறுதியிலோ அல்லது 1979-ஆம் ஆண்டின் தொடக்கத்திலோ செந்துல் கிளையின் முதல் தேர்தல் கூட்டம் நடந்ததாக நினைவு.
அந்த தேர்தலில் கோடிவேல் தலைவர் பதவிக்கும் அவரது அணியில் பிலிப்ஸ் அடோல்பஸ் (ஸ்தாப்பாக் இடைநிலைப் பள்ளியின் ஆசிரியர்; பின்னர் வழக்கறிஞர்; ஹாஜி ஹூசேன் மஇகா கிளைத் தலைவர்) செயலாளர் பதவிக்கும் போட்டியிட்டனர்.
கோடிவேல் அணியினர் மாணிக்கவாசகம், முன்னாள் துணைத் தலைவர் டான்ஸ்ரீ சுப்பிரமணியம் ஆகியோரின் ஆதரவாளர்களாகப் போட்டியிட்டனர்.
செந்துல் கிளைத் தேர்தலில் இன்னொரு அணியாக ‘இலக்கியச் செல்வர்’ எஸ்.இராஜா பிபிடி தலைவர் பதவிக்கும் மறைந்த எழுத்தாளர் கு.சா.பெருமாள் செயலாளர் பதவிக்கும் போட்டியிட்டனர்.
ராஜா அணியினர் அப்போது கட்சியின் துணைத் தலைவராக இருந்த (துன்) சாமிவேலு ஆதரவாளர்களாகச் செயல்பட்டனர்.
1977- ஆண்டில் நடைபெற்ற சாமிவேலு – சுப்பிரமணியம் இடையிலான துணைத் தலைவர் பதவிக்கான போட்டியைத் தொடர்ந்து மஇகாவில் எல்லாக் கிளைகளிலும், எல்லா நிலைகளிலும் சாமிவேலு, சுப்பிரமணியம் அணியினர் என இரு பிரிவாக பிளவுபட்டு இருந்த காலகட்டம் அது!
இரண்டு அணியினரும் செந்துல் தெருக்களில் குழுவாக, வீடு வீடாக உறுப்பினர்களைத் தேடிச் சென்று பிரச்சாரங்கள் செய்தனர்.
அனைவரும் இந்த இரு அணியினரில் வெல்லப் போகிறார்கள் என்பதை ஆர்வத்துடன் கவனித்துக் கொண்டிருக்க, வேட்பு மனுத் தாக்கலின் போது புதிதாக மூன்றாவது அணி ஒன்று தோன்றியது.
மூன்றாவது அணி டாக்டர் சிவலிங்கம் தலைமையில் தலைவருக்கு போட்டியிட அவரது அணியில் செயலாளராக போட்டியிட்டார் எழுத்தாளர் மு. அன்புச்செல்வன் (இயற்பெயர் பெருமாள்).
இறுதியில் சிவலிங்கம் அணியினரே யாரும் எதிர்பாராத விதமாக அந்த தேர்தலில் வெற்றி பெற்று செந்துல் கிளையைக் கைப்பற்றினார்
அதன்பின் கோடிவேல் கூட்டரசுப் பிரதேச மாநில மஇகா கிளை ஒன்றில் தலைவராக கொஞ்ச காலத்திற்குச் செயல்பட்டார். மாணிக்கவாசகத்தின் மகன் ரமணியுடன் இணைந்து மஇகா வேலைவாய்ப்புக் குழுவிலும் சேவையாற்றினார்.
மஇகா கட்டட நிதிக்கு முதல் நன்கொடை வழங்கிய கோடிவேல் தந்தை
கோடிவேலின் தந்தையார் லிங்கத் தேவர் அந்தக் காலத்திலேயே தலைநகரில் முக்கிய வணிகப் பிரமுகராகத் திகழ்ந்தவர். பசுமார் சுருட்டு எ
ன்ற பெயரில் சுருட்டு தயாரிக்கும் தொழிற்சாலையை நிறுவி, அந்த சுருட்டை அப்போது பிரபல்யமாக்கி இருந்தார்.
இன்றைக்கு வீற்றிருக்கும் மஇகா தலைமைக் கட்டடம் உருவானபோது லிங்கத் தேவர் கைராசிக்காரர் எனக் கருதிய டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் முதன் முதலில் அவரிடம் நன்கொடை கேட்டதாகவும் அதற்கேற்ப 5000 ரிங்கிட் அவர் வழங்கினார் என்பதும் ஒரு தகவல்.
மஇகா கட்டட நிதிக்கு முதல் நன்கொடை வழங்கியவர் கோடிவேல் தந்தை லிங்கத் தேவர் என்பது நன்றியுடன் நினைவு கூரப்பட வேண்டிய ஒரு தகவல்.
தன் வாழ்நாளில் சமூக இயக்கங்களிலும் ஈடுபாடு காட்டிய கோடிவேல், ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் தீவிர ஈடுபாடு காட்டினார். அதன் தலைவராகவும் பணியாற்றினார்.
அவர் தலைவராகப் பணியாற்றிய அந்த காலகட்டத்தில் இப்போது தலைவராக இருக்கும் டான்ஸ்ரீ நடராஜா அவருக்கு செயலாளராக பணியாற்றினார். அவரது தலைமைத்துவத்தின் காலகட்டத்தில்தான் தைப்பூச பொது விடுமுறை பெரும் போராட்டத்திற்குப் பின்னர் சாத்தியமானது.
கோடிவேல், தந்தை மறைவுக்குப் பின்னர் குடும்பத் தொழிலான சுருட்டு விநியோகத்தையும், தயாரிப்பையும் ஸ்ரீ அம்பாள் அண்ட் கோ என்ற நிறுவனத்தின் பெயரில் தொடர்ந்து நடத்தினார்.
பசு மார் சுருட்டு என்பது அவர்களின் வணிக முத்திரையோடு வெளிவந்த சுருட்டு. தரமான தயாரிப்பு என வாடிக்கையாளர்களால் விரும்பி வாங்கப்பட்டது.
ஜாலான் ஈப்போ பகுதியில் அவர்களின் அலுவலகமும் உற்பத்தி தொழிற்சாலையும் அமைந்திருந்தது.
எனது தந்தையார் சுருட்டு பிடிக்கும் பழக்கம் உள்ளவர் என்பதால் அங்கு அவருடன் சென்று அடிக்கடி சுருட்டு வாங்கிய வகையில் பசுமர்க் நிறுவனம் எனக்கு இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது.
அந்தக் காலத்தில் கோடிவேலின் அந்த பசு மார்க் சுருட்டு நிறுவனம் வெளியிடும் ஆண்டு (காலண்டர்) நாள் காட்டிகள் மிகவும் பிரசித்தம்.
தினசரி கிழிக்கக் கூடிய தாள்களோடு கடினமான அட்டையில் அவர்களின் வணிக முத்திரையோடு வெளியிடப்பட்ட நாள்காட்டிகளை ஒவ்வொரு இந்தியர் இல்லத்திலும் பார்க்கலாம்.
கோடிவேல் சுருட்டு வணிகத்தில் ஈடுபட்டதோடு லெபோ அம்பாங் சாலையில் ஒரு பலசரக்கு கடை யையும் நடத்திவந்தார். அனைவரிடமும் இன்முகத்துடன் கலகலப்புடன் உரையாற்றுபவர்.
எண்பதாம் ஆண்டுகளில், தலைநகரின் எந்த ஒரு தமிழ் நூல் வெளியீட்டிலும் அவரது பங்களிப்பு நிச்சயம் இருக்கும். அவரே நேரடியாக வந்து வாழ்த்துரை வழங்கி முதல் நூலை வாங்கிச் செல்வார்.
அவர் வர முடியாவிட்டாலும் நூலுக்குரிய தொகையை அனுப்பி நூல் வாங்கும் கண்ணியத்தையும், நற்பண்பையும் அவர் கொண்டிருந்தார். மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுக்கு அவர் மரியாதை காட்டினார்.
மாணிக்கவாசகம் மறைவுக்குப் பின்னர் அவரது இளைய சகோதரர் டத்தோ காந்தன் அவர்களுடன் நெருங்கிய தொடர்புகள்-நட்பு கொண்டிருந்தார். அதன் காரணமாக காந்தன் முன்னின்று தொடங்கிய சிலம்பக் கழகம் போன்ற அமைப்புகளிலும் ஈடுபாடு காட்டினார் கோடிவேல்.
கால ஓட்டத்தில், சூழ்நிலை மாற்றங்களால் கோடிவேலுவுக்கு வணிகத்தில் சரிவுகள் ஏற்பட்டது. அனைத்துலக சிகரெட் நிறுவனங்களின் வருகை – அவர்களின் கோடிக்கணக்கான ரிங்கிட் விளம்பரங்கள் – ஆகியவற்றின் தாக்கங்களால் இந்தியர்களின் பாரம்பரியத் தொழில்களாக விளங்கிய சுருட்டு-பீடி வணிகம் சரியத் தொடங்கியது.
வணிகத்தில் ஏற்பட்ட பின்னடைவு – உடல் நலம் குன்றியது – போன்ற காரணங்களால் அவர் சமூக, அரசியல் ஈடுபாடுகளில் இருந்து கடந்த சில ஆண்டுகளாக ஒதுங்கிக் கொண்டார். பொது நிகழ்ச்சிகளிலும் அதிகமாக அவர் கலந்து கொள்ளவில்லை.
கால ஓட்டத்தில் அவர் பொது வாழ்க்கை ஈடுபாட்டில் ஒதுங்கிக் கொண்டாலும் எண்பதாம் ஆண்டுகளில் அவர் அரசியல், சமூகம், உள்ளூர் தமிழ் இலக்கியம் போன்ற துறைகளில் வழங்கிய பங்களிப்பு எப்போதும் நினைவுகூரத்தக்கது.