கோலாலம்பூர்: எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவன வழக்கில் ஊழல் செய்ததாக நஜிப் ரசாக் மீது வழக்குத் தொடர இயலாமல் போனதாகக் கூறி தனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக முன்னாள் சட்டத்துறைத் தலைவர் டோமி தோமஸுக்கு எதிராக ஓய்வுபெற்ற மூத்த சட்ட அதிகாரி ஒருவர் காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.
ஆகஸ்ட் மாதம் நீதித்துறை மற்றும் சட்ட பயிற்சி நிறுவனத்தில் (ஐ.எல்.கே.ஏ.பி) மூத்த ஆராய்ச்சி அதிகாரியாக ஓய்வு பெற்ற முகமட் ஹனாபியா சகாரியா, தோமஸை குற்றவியல் அவதூறு வழக்கு விசாரிக்குமாறு காவல் துறையை வலியுறுத்தி உள்ளார்.
சைபர்ஜயா காவல் நிலையத்தில் நேற்று மாலை தாக்கல் செய்யப்பட்ட தனது புகாரில், பிற சட்டத்துறைத் தலைவர் அலுவலக அதிகாரிகளின் நற்பெயர் மற்றும் அவ்வமைப்பின் பெயரை களங்கப்படுத்தியதற்காக தண்டனைச் சட்டத்தின் 499- வது பிரிவின் கீழ் தோமஸை காவல் துறை விசாரிக்க வேண்டும் என்று ஹனாபியா கூறினார்.
தோமஸ் தனது நினைவுக் குறிப்பில் அவரைக் குறிப்பிட்ட பின்னர் அவர் இந்த புகாரை அளித்ததாகக் கூறியுள்ளார்.
ஹனாபியா தான் 33 ஆண்டுகளாக நீதித்துறை மற்றும் சட்ட சேவையில் இருப்பதாகவும், பல பதவிகளை வகித்ததாகவும், பொது நலன் சார்ந்த வழக்குகளை மத்திய நீதிமன்றம் வரை நடத்தியதாகவும் கூறினார்.
எஸ்.ஆர்.சி போன்ற உயர் வழக்குகளை விசாரிக்க என்னால் இலயவில்லை என்ற தோமஸின் குற்றச்சாட்டு எனது நற்பெயரைக் களங்கடிக்கும் நோக்கம் கொண்டது என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்தார்.