கோலாலம்பூர்: முடா கட்சி பதிவு செய்யாதது குறித்த அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக வழக்கு மனுவை சமர்ப்பித்திருந்த கட்சியின் விண்ணப்பத்தை உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.
நீதிபதி மரியானா யஹ்யா, முன்னாள் அமைச்சர் சைட் சாதிக் தலைமையிலான முடா, வழக்கு மனுவிற்கு பதிலாக, உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடினுக்கு முதலில் தங்களது முறையீட்டை தாக்கல் செய்திருக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.
இன்று இயங்கலை மூலமாக நீதிமன்றத்தின் தீர்ப்பை வழங்கிய மரியானா, ஜனவரி 25 அன்று முடாவின் வழக்கறிஞர் டோமி தோமஸ் மற்றும் மூத்த கூட்டரசு வழக்கறிஞர் அகமட் ஹனீர் ஹம்பாலி @ அர்வி ஆகியோரிடமிருந்து வாதங்களைக் கேட்டிருந்தார்.
ஜனவரி 6- ஆம் தேதி சங்கப் பதிவாளர் முடா கட்சிக்கு மின்னஞ்சலை அனுப்பியதாக அது கூறியது, ஆயினும், பதிவு செய்யப்படாததற்கு எந்த காரணமும் தெரிவிக்கப்படவில்லை.
முடா கட்சியைத் தவிர, முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் தலைமையிலான பெஜுவாங் கட்சியும் பதிவு செய்ய சங்கப் பதிவாளர் நிராகரித்தது.