கோலாலம்பூர் : நீதித்துறையிலும் நீதிபதிகள் இடையே முறைகேடுகள் நடப்பதாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதற்காக நீதிபதி ஹாமிட் சுல்தான் (படம்) அவரது பதவியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
நேற்று பிப்ரவரி நான்காம் தேதி மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதியான ஹாமிட் சுல்தான் எதிர்வரும் ஆகஸ்ட் 27-ஆம் தேதி வரை இடைநீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதே தேதியில்தான் அவர் பதவி ஓய்வு பெறுகிறார். எனவே, பதவிக் ஓய்வு காலம் நிறைவுக்கு வருவதால் அவரது இடை நீக்கத்தைத் தொடர்ந்து அவர் நீதிபதி பதவியில் மேலும் நீடிக்க முடியாது.
நீதிபதிகளுக்கான நன்னெறிக் குழு அவர் மீதான புகார்களை விசாரித்தனர். விசாரணைக்குப் பின்னர் அவரை இடை நீக்கம் செய்யும் முடிவை எடுத்துள்ளனர்.
இந்த முடிவை ஹாமிட் சுல்தானின் வழக்கறிஞர் தெரிவித்ததாக இணைய ஊடக செய்தி ஒன்று குறிப்பிட்டது.
நீதிபதிகள் மீதான புகார்களை விசாரிக்க நீதிபதிகளுக்கான நன்னெறி குழு ஒன்று நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் 2010ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
அதன்படி விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் முதல் நீதிபதி ஹாமிட் சுல்தான் ஆவார்.
2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நீதித்துறையில் அதிகார விதி மீறல்களும் முறைகேடுகளும் நடைபெறுவதாக சத்தியபிரமாணம் ஒன்றை ஹாமிட் சுல்தான் தாக்கல் செய்திருந்தார். அந்த சத்திய பிரமாணத்தின் பெரும்பாலான பகுதிகள் அதன் பின்னர் நீதித்துறை தரப்புகள் ஆட்சேபத்தால் நீக்கப்பட்டன.
நம்பிக்கைக் கூட்டணி ஆட்சி 2018-இல் ஏற்பட்டபோது சுல்தானின் புகார்களை விசாரிப்பதற்காக அரச விசாரணை வாரியம் நியமிக்கப்பட வேண்டுமென கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. ஆனால் அதற்கு நீதிபதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஹாமிட் சுல்தான் மீது ஆகஸ்ட் 2020-இல் காரணம் கோரும் கடிதம் அனுப்பி அவர் மீதான விசாரணைகளை நீதிபதிகள் நன்னெறி குழு தொடங்கியது. அதைத் தொடர்ந்தே அவர் மீது இடைக்கால நீக்கம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
எனினும் அந்த விசாரணைக் குழுவின் முன் தோன்றி தனது தரப்பு வாதங்களை முன்வைக்க ஹாமிட் சுல்தான் மறுத்து விட்டார். அந்த குழு சட்டரீதியானது என்பதை ஒப்புக்கொள்ள மறுத்த அவர் அந்தக் குழுவின் உறுப்பினர் கட்டமைப்பையும் எதிர்த்தார்.
ஹாமிட் சுல்தான் இந்திய முஸ்லீம் வம்சாவளியைச் சேர்ந்தவர். தமிழில் சிறந்த புலமையும் கொண்டவர். சரளமாக தமிழ் மொழியில் உரையாடும் வல்லமை படைத்தவர். பல சட்ட நூல்களையும் அவர் எழுதியிருக்கிறார்.
கடந்த 2007 ஆம் ஆண்டு மார்ச் ஒன்றாம் தேதி அவர் நீதித்துறை ஆணையராக நியமிக்கப்பட்டார்.
2009 இல் அவர் உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு கண்டார். 2013 ஆண்டில் அவர் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.