கோலாலம்பூர்: இன்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 5) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 3,391 புதிய கொவிட்-19 தொற்றுகள் பதிவாகியுள்ளன.
இதில் 3,387 தொற்றுகள் உள்நாட்டில் பதிவானவை. 4 தொற்றுகள் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களால் பதிவானவை.
இதைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 234,874 ஆக அதிகரித்துள்ளன. இன்று மட்டும் 3,392 பேர் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். தொற்றுகளில் இருந்து குணமாகி இல்லம் திரும்பியவர்களின் எண்ணிக்கை மொத்தமாக 185,278 ஆக அதிகரித்துள்ளன.
இன்றைய நிலையில் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 48,751 ஆகும்.
சிகிச்சை பெற்று வருபவர்களில் 310 பேர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை வழங்கப்படுகிறது. அவர்களில் 134 பேருக்கு சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.
இன்றைய ஒரு நாளில் 19 மரணங்கள் பதிவானதைத் தொடர்ந்து இதுவரையிலான மரண எண்ணிக்கை 845- ஆக உயர்ந்துள்ளது.
மாநிலங்கள் அளவில் மிக அதிகமான சம்பவங்கள் சிலாங்கூரில் பதிவாகி உள்ளன. 1,228 சம்பவங்கள் சிலாங்கூரில் மட்டும் பதிவாகி உள்ளன. இதை அடுத்து 598 சம்பவங்கள் ஜோகூரிலும், கோலாலம்பூரில் 395 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.