கோலாலம்பூர்: அம்னோ பொதுச் செயலாளர் அகமட் மஸ்லான், முன்னாள் சட்டத்துறைத் தலைவர் டோமி தோமஸ் புத்தகம் தொடர்பாக நேற்று காவல் துறையில் புகார் ஒன்றை பதிவு செய்தார்.
டோமி தோமசின் கூற்றுகள் நாட்டின் வரலாற்றையும், சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்தையும் அவமதித்ததற்கு ஒப்பானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் இரண்டாவது பிரதமர் அப்துல் ரசாக் ஹுசைனை 1969 மே 13 சம்பவத்துடன் இணைக்கும் குறிப்புகள் டோமி தோமசின் “மை ஸ்டோரி: ஜஸ்டிஸ் இன் டி வைல்டர்னஸ்” என்ற புத்தகத்தில் அடங்கியுள்ளன. அவை தேசத்துரோகம் மற்றும் தீங்கிழைக்கும் தன்மை கொண்டவை என்றும் அவை அரசாங்கத்தின் மீது வெறுப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் கூறினார்.
“தேசத்துரோகச் சட்டம் 1948- இன் பிரிவு 3 மற்றும் 4 (1), அதிகாரப்பூர்வ இரகசியங்கள் சட்டம் 1972- இன் பிரிவு 8 மற்றும் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 500 ஆகியவற்றின் கீழ், அவர் மீது விசாரணையைத் தொடங்க காவல் துறையிடம் நான் புகார் அளித்தேன்,” என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், டாங் வாங்கி மாவட்ட காவல் துறைத் தலைவர் முகமட் சைனால் அப்துல்லா இந்த அறிக்கையைப் பெற்றதை உறுதிப்படுத்தினார். மேலும் விசாரணைகள் நடைபெற்று வருவதாகக் கூறினார்.
இந்த வழக்கு தொடர்பாக காவல் துறை ஏழு புகார்கள் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.