கோலாலம்பூர்: இன்று செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 9) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 2,764 புதிய கொவிட்-19 தொற்றுகள் பதிவாகியுள்ளன. நாட்டில் கொவிட் தொற்றுகள் கடந்த சில நாட்களாக கட்டம் கட்டமாகக் குறைந்து வருவதையே இந்தப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
இதில் 2,758 தொற்றுகள் உள்நாட்டில் பதிவானவை. 6 தொற்றுகள் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களால் பதிவானவை.
இதைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 248,316- ஆக அதிகரித்துள்ளன.
கடந்த ஒரு நாளில் மட்டும் 3,887 பேர் குணமடைந்து இல்லம் திரும்பியிருக்கின்றனர். தொற்றுகளில் இருந்து குணமாகி இல்லம் திரும்பியவர்களின் எண்ணிக்கை 196,566 ஆக அதிகரித்துள்ளது.
இன்றைய நிலையில் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 50,841 ஆகும்.
சிகிச்சை பெற்று வருபவர்களில் 289 பேர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை வழங்கப்படுகிறது. அவர்களில் 127 பேர்களுக்கு சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.
இன்றைய ஒரு நாளில் 13 மரணங்கள் பதிவானதைத் தொடர்ந்து இதுவரையிலான மரண எண்ணிக்கை 909 ஆக உயர்ந்துள்ளது.
மாநிலங்கள் அளவில் மிக அதிகமான சம்பவங்கள் சிலாங்கூரில் பதிவாகி உள்ளன. 862 சம்பவங்கள் சிலாங்கூரில் மட்டும் பதிவாகி உள்ளன. இதை அடுத்து 521 சம்பவங்கள் ஜோகூரிலும், கோலாலம்பூரில் 422 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.