கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் இரண்டாவது நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை அமல்படுத்துவதில் அரசின் முடிவுகளை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
இன்று முதல் நடைமுறைக்கு வரும் உணவகங்களில் அமர்ந்து உண்ணும் அனுமதி மற்றும் கிட்டத்தட்ட அனைத்து வணிகங்களும் திறக்க அரசு முடிவு செய்த பின்னர் தமது கருத்தினை அவர் வெளியிட்டுள்ளார்.
“நடமாட்டக் கட்டுப்பாடு ஆணைக்கு இனி அர்த்தம் இல்லை. அதை நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையாக மாற்றி, மாநிலங்களுக்கு இடையிலான பயணங்களை தடை செய்யுங்கள்.
“நகரத்தில் உள்ள அனைத்து சாலைத் தடைகளையும் நிறுத்துங்கள், ஏனென்றால் எல்லா வணிகங்களும் தொடர்ந்து செயல்பட்டு வருவதால் காவல் துறையினர் அதைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம்.
“கட்டுப்பாடு உத்தரவு என்றால் ‘அனைத்தும் திறந்திருக்கும்’ என்று பொருள்படும் உலகின் ஒரே நாடுகளில் ஒன்றாக மலேசியா மாறிவிடக்கூடாது,” என்று நேற்று இரவு நஜிப் முகநூலில் தெரிவித்தார்.
னேற்று, தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப், உணவகங்களில் இரண்டு பேர் ஒரு மேசையில் என்ற கணக்கில் உணவருந்த அனுமதிக்கப்படுவதாகவும், ஆடை அலங்காரம் உட்பட பிற வணிகங்களைத் திறக்க அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.