கோலாலம்பூர்: கட்சியின் பதிவு குறித்து மிரட்டும் பெர்சாத்து உச்சமன்ற உறுப்பினரின் செயலை அம்னோ உச்சமன்ற உறுப்பினர் ரஸ்லான் ரபி கேள்வி எழுப்பியுள்ளார்.
அம்னோவின் இரகசிய தணிக்கை செய்யப்படாத வங்கிக் கணக்கு குறித்த குற்றச்சாட்டை விசாரிக்குமாறு முகமட் பைஸ் நாமான் நேற்று சங்கப் பதிவாளரை வலியுறுத்தினார்.
பெர்சாத்து கட்சிக்கு அம்னோவின் ஆதரவு தேவைப்படும் நிலையில், பைஸ் அம்னோவை அச்சுறுத்தியதாக ரஸ்லான் கூறியுள்ளார்.
“சங்கப் பதிவாளருக்கு அவர்களின் பணியின் நோக்கம் தெரியும் என்று நான் நம்புகிறேன். அம்னோவை தடை செய்ய பெர்சாத்து தலைவர்கள் அவசரப்பட வேண்டியதில்லை. இந்த காரணத்திற்காக, தொழில்நுட்ப காரணத்தை பயன்படுத்துவது அசாதாரண செயல். மக்களின் இதயங்களை வென்று பெர்சாத்து அம்னோவை எதிர்த்துப் போராட வேண்டும். 1946- ஆம் ஆண்டில் மக்களால் நிறுவப்பட்ட ஒரு கட்சியை வீழ்த்த முயற்சிப்பதன் மூலம் அல்ல, ” என்று ரஸ்லான் கூறினார்.
“பெர்சாத்துவில் உள்ளவர்கள் அம்னோவின் நல்லெண்ணத்தின் காரணமாக மொகிதின் யாசின் இன்று பிரதமராக இருப்பதை மறந்துவிடக் கூடாது என்பதை நான் நினைவுபடுத்த விரும்புகிறேன், ”என்று அவர் மேலும் கூறினார்.
அந்த பணம் கட்சிக்கு சொந்தமானது என்று அம்னோ கூறியது. ஆனால், அரசியல் நன்கொடைகள் இருப்பதாக அரசு தரப்பு குறிப்பிட்டுள்ளது.