(பன்னாட்டுத் தாய்மொழி நாள் இன்று பிப்ரவரி 21 நாள் உலகம் முழுவதும் கொண்டாடப்படுவதை முன்னிட்டு செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன் எழுதிய இந்த சிறப்புக் கட்டுரை இடம் பெறுகிறது)
பன்னாட்டுத் தாய்மொழி நாள் இன்று பிப்ரவரி 21 நாள் உலகம் முழுவதும் கொண்டாடப்படுறது.
உலகில் உள்ள ஒவ்வொரு மொழியும் முக்கியம். அவற்றை அழியாமல் பாதுகாக்க வேண்டும். ஒவ்வொருவரும் அவர்களின் தாய்மொழியை தங்களின் இன்னுயிருக்கு நிகராக மதிக்கின்றார்கள் – இத்தகைய நிலைப்பாடுகளுக்கும், நோக்கங்களுக்கும் ஏற்ப ஐக்கிய நாடுகள் மன்றத்தின் கல்வி, கலாச்சாரப் பிரிவான யுனெஸ்கோ இந்த தாய்மொழி நாளை முன்னெடுத்துக் கொண்டாடுகிறது.
இந்த ஆண்டுக்கான கருப்பொருள் “கல்வியிலும், சமூகத்திலும் இணைப்பதற்காக பன்மொழிகளை வளர்த்தெடுப்போம்” (Fostering Multilingualism for Inclusion in Education and Society) என்பதாகும்.
இதன் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மன்றம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் எல்லா மொழிகளையும், பன்மொழிப் பயன்பாட்டையும் பன்னாட்டுத் தாய்மொழி நாள் அங்கீகரிக்கிறது எனத் தெரிவித்தது.
தாய்மொழி நாள் ஏன் கொண்டாடப்படுகிறது?
இந்தியா பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றபோது பாகிஸ்தானும் தனிநாடாக சுதந்திரம் பெற்றது. இரண்டு நிலப்பகுதிகளாக இருந்த – முஸ்லீம் மக்களை அதிகமாகக் கொண்ட பகுதிகள் – ஒன்றிணைக்கப்பட்டு பாகிஸ்தான் என்ற தனிநாடு உருவானது.
இந்தியாவின் மேற்கு வங்காளத்தை ஒட்டிய பகுதி கிழக்கு பாகிஸ்தான் என அழைக்கப்பட்டது.
குஜராத், பஞ்சாப், இராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர் ஆகிய இந்திய மாநிலங்களோடு எல்லைகளைக் கொண்டிருந்த நிலப்பகுதி மேற்கு பாகிஸ்தான் என அப்போது அழைக்கப்பட்டது.
கிழக்கு, மேற்கு பாகிஸ்தான் பகுதிகளை இணைத்துத்தான் பாகிஸ்தான் என்ற நாடு உருவானது.
மதத்தால்தான் அவர்கள் இணைக்கப்பட்டிருந்தார்களே தவிர. மொழியாலும், இனம் என்ற அடிப்படையிலும் இரண்டு பகுதி மக்களும் முற்றிலும் மாறுபட்ட கலாச்சாரத்தைக் கொண்டிருந்தார்கள்.
மேற்கு பாகிஸ்தானில் உருது மொழி முதன் மொழியாகத் திகழ்ந்தது. ஆனால் கிழக்கு பாகிஸ்தானில் வங்காள மொழிக்கே முதன்மை.
கிழக்கு பாகிஸ்தானின் தேசிய மொழியாக வங்காள மொழியே இருக்கவேண்டும் என்பதற்காக 1952ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ‘வங்க மொழி இயக்கத்தை’ அங்கீகரிப்பதற்காகவே பிப்ரவரி 21ஆம் நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.
இந்த நாளில் தான் வங்க மொழி இயக்கத்திற்காக ஒன்று திரண்ட மாணவர்களும் போராளிகளும் மொழி ஆர்வலர்களும், தாய்மொழிக்காகப் போராட்டத்தில் இறங்கினர். காவல் துறையின் நடவடிக்கையால், சில மாணவர்களும் கொல்லப்பட்டனர். போராட்டங்கள் நாடு முழுவதும் சில ஆண்டுகள் கடந்தும் தொடர்ந்தன.
இறுதியில், 1956 ஆண்டு கிழக்கு பாகிஸ்தானின் அதிகாரபூர்வ மொழியாக வங்க மொழி அறிவிக்கப்பட்டது.
மொழிக்காக நடத்தப்பட்ட போராட்டங்களையும், அதற்காக உருவான இயக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டு, உலக மக்களின் தாய்மொழி உரிமையைப் பாதுகாக்க 1999 ஆம் ஆண்டில், 21 பிப்ரவரியை பன்னாட்டுத் தாய்மொழி நாள் என ஐக்கிய நாடுகள் மன்றத்தின் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ) அறிவித்தது.
உலகத் தாய்மொழி நாள் 2000-ஆம் ஆண்டு முதல் பிப்ரவரி 21 நாளன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
கால ஓட்டத்தில் கிழக்கு- மேற்கு பாகிஸ்தான் நிலப்பகுதிகளுக்கு இடையில் மோதல்கள் அதிகரித்தன. அதைத் தொடர்ந்து 1971-இல் அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி நடத்திய வங்காள தேசப் போரினால் கிழக்கு பாகிஸ்தான், தனிநாடாக சுதந்திரம் பெற்றது, வரலாற்றின் இன்னொரு பக்கம்.
இன்றைய தாய்மொழி நாள் கொண்டாட்டத்தில் நமது தாய்மொழியாம் அன்னைத் தமிழ் மொழியைத் தொடர்ந்து உலகின் தொன்மை மிக்க மொழியாக நிலைநிறுத்த, பாதுகாக்க, நம்மால் இயன்ற அனைத்தையும் செய்வோம்!