Home நாடு “தாய்மொழி தினத்தில் பிள்ளைகளுக்கு நம் தொன்மை, பெருமை எடுத்துக் கூறுவோம்” – சரவணன்

“தாய்மொழி தினத்தில் பிள்ளைகளுக்கு நம் தொன்மை, பெருமை எடுத்துக் கூறுவோம்” – சரவணன்

806
0
SHARE
Ad

மனிதவள அமைச்சரும் மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் அவர்களின் தாய்மொழி தின வாழ்த்துச் செய்தி

பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவ வானினும் நனி சிறந்தனவே – பாரதியார்

உலகில் பல்லாயிரம் மொழிகள் இருந்தாலும் ஒருவருக்கு அவரின் தாய்மொழி என்பது தாயை விடச் சிறந்தது என்கிறார் மகாகவி பாரதியார்.

மொழி என்பது வெறும் வார்த்தைகள் அல்ல. அது ஓர் இனத்தின் அடையாளம். நம் பண்பாட்டின் விழி. மொழியின்றி சிந்தனையில்லை, சிந்தனையின்றி மனிதன் இல்லை. மனிதனது பிறப்பாலும்⸴ மரபாலும் பின்னிப் பிணைந்த ஒரு பிரிக்க முடியாத அங்கமே தாய்மொழி ஆகும்.

#TamilSchoolmychoice

லத்தீன், கீரேக்கம், ஹீப்ரூ, சம்ஸ்கிருதம், சீனம் ஆகிய உலகச் செம்மொழிகளின் வரிசையில் இடம்பெற்றிருக்கும் தமிழ்மொழி, உலகின் மிகத் தொன்மையான மொழி என்று கூறும் போது அதன் பெருமைக்கு அளவே இல்லை. தொன்மை⸴ இனிமை⸴ எளிமை என பல சிறப்புகளைக் கொண்டதுதான் நம் தாய்மொழியான தமிழ் மொழி.

சிந்தனை ஆற்றலை வளர்ப்பதும், படைப்புத் தன்மையை உருவாக்குவதும், நாகரிகமான சமூக மனிதராக மாற்றுவதும் சமூகப் பண்பாட்டைக் காப்பாற்றிக் கொண்டே அதை மேம்படுத்துவதும் சிறந்த கல்வியின் நோக்கம். அந்தக் கல்வியைத் தாய்மொழியில் பயிலும் குழந்தைகளே மிகவும் ஆழமாகக் கல்வி கற்கின்றனர் என்பது நிதர்சனம்.

தாய்மொழியில் கல்வி பற்றி, ஐ.நா. சபையின் அமைப்புகள்  UNESCO கூறுகையில், மனித ஆற்றலை வளமையாக்கவும், ஒருவரது படைப்பாற்றலை அதிகப்படுத்தவும் தாய்மொழிக் கல்வியால் மட்டுமே முடியும். இது அறிவியல் பூர்வமாக நிரூபணமான உண்மை. மனிதனது சிந்தனைத் திறனுக்கும் தாய்மொழிக்கும் தொடர்பு இருக்கிறது. தாய்மொழியிலேயே ஒருவர் அதிகம் சிந்திக்க முடியும்.

சிறுவயது முதலே நம் பிள்ளைகளுக்கு நம் தாய்மொழியான தமிழ் மொழியின் சிறப்பையும், அதில் புதைந்து கிடக்கும் தமிழ் அறிஞர்களின் படைப்பையும் அறிமுகம் செய்வோம்.

எனவே தாய்மொழி தினத்தில், தாய்மொழியைப் போற்றுவோம்.

தமிழ்மொழியைக் காப்போம்.

சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே
அதைத் தொழுது படித்திடடி பாப்பா