Home One Line P1 தாய்மொழி நாள் : சரவணனின் சிறப்புச் செய்தி

தாய்மொழி நாள் : சரவணனின் சிறப்புச் செய்தி

633
0
SHARE
Ad

உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு மனித வள அமைச்சரும், மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் வழங்கிய சிறப்புச் செய்தி

“இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்”

1999 ஆம் ஆண்டு UNESCO வால் அமல்படுத்தப்பட்ட உலகத் தாய்மொழி தினம், பிப்ரவரி 21ஆம் தேதி உலகளவில் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் அவரவர் தாய்மொழியைக் கொண்டாடி மகிழும் இவ்வேளையில் நமது தாய்மொழியான தமிழைப் போற்றிப் புகழ்வதில் நான் பெருமையடைகிறேன்.
தமிழ்மொழி உலகில் தோன்றிய மொழிகளுள் மிகப் பழமையான மொழி என மொழி ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

பல அகழ்வாராய்ச்சிகள் தமிழின் தொன்மையைப் பறைசாற்றி நிற்கின்றன. தமிழ்மொழி உருவான காலத்தில் இருந்து இன்றுவரை தனது இனிமையும் இளமையும் சற்றும் குன்றாமல் இருக்கின்றது.

முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என சங்கம் வைத்து வளர்த்த மூத்த மொழி நமது தமிழ்மொழி. மொழியை இயல், இசை, நாடகம் என 3 வகையாகப் பிரித்து வாழ்வியலாக்கியுள்ளனர்.

ஞா.தேவநேயப் பாவாணர் கூறுகையில் தொன்மை, முன்மை, எளிமை, ஒண்மை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, செம்மை, மும்மை, இனிமை, தனிமை, பெருமை, திருமை, இயன்மை, வியன்மை என்று தமிழின் பெருமையை அடுக்குகிறார்.

தமிழ், ஆங்கிலம், பிராஞ்சு, இந்தி என பல மொழிகளில் புலமைபெற்ற மகாகவி பாரதியார் “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல், இனிதாவது எங்கும் காணோம்” எனக் கூறியுள்ளார்.

பிற மொழிகளில் இல்லாத அளவிற்கு தமிழில் இலக்கண, இலக்கிய, அறநூல்களும், வாழ்வியல் தத்துவங்களும் குவிந்து கிடக்கின்றன. தொல்காப்பியம், கம்ப இராமாயணம், பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, குறுந்தொகை, நாலடியார், முதுமொழிக்காஞ்சி, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, ஆசாரக்கோவை இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

இதில் கி.மு.3000 ஆண்டுகள் பழமையானது தொல்காப்பியம், கி.மு 2000 ஆண்டுகள் பழமையானது திருக்குறள். 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இன்றைய சூழலுக்கும் பொருந்தும் விஷயங்களைத் தமிழில் எழுதியுள்ளார் என்றால் அந்த மொழிக்கும், இனத்திற்கும் உள்ள பெருமையைச் சொல்ல வேறு சான்றுகள் வேண்டுமா?

இந்த நூல்களை முதலில் நமது பிள்ளைகள் அறியச் செய்ய வேண்டும். அதில் உள்ள இலக்கியச் சுவைகளைப் பருகினாலே போதும் தமிழ் மொழி மேல் தீராக்காதல் ஏற்படும்.

கடந்த முன்னூறு ஆண்டுகளில் 6000-க்கும் மேற்பட்ட மொழிகள் உலகில் இருந்து மறைந்து விட்டன என்று கூறப்படுகிறது. உலகில் தாய்மொழிகள் அழிந்து வரும் அபாயத்தை நீக்குவதற்கான அனைத்துலகக் கடப்பாட்டின் வெளிப்பாடாகவே உலகத் தாய்மொழி தினத்தை ஐக்கிய நாடுகள் மன்றம் 21-ஆம் நூற்றாண்டின் தொடக்கமாக 2000-ஆம் ஆண்டு முதல் கொண்டாடி வருகிறது.

ஒருமொழி அழியும் பொழுது வெறுமனே அம்மொழியின் சொற்களும் அச்சொற்களுக்கான பொருள்களும் மட்டும் அழியவில்லை அந்த மொழி பேசிய இனத்தின் அடையாளம், தொன்மை, வரலாறு, கலை கலாச்சாரம், பண்பாடு அனைத்தும் சேர்ந்து அழிகின்றன.

ஐக்கிய நாடுகள் மன்றத்தின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சாரத்திற்கான அனைத்துலக அமைப்பு, யுனெஸ்கோ, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் தாய்மொழியில் பேசுவதில், எழுதுவதில், வாசிப்பதில் காட்டி வரும் எதிர்மறையான போக்கே ஒரு தாய் மொழியின் அழிவுக்கான அடிப்படைக் காரணம் என எச்சரித்துள்ளது. இது எந்த அளவிற்கு உண்மை என்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.

நாம் பல மொழிகளை அறிந்து வைத்திருப்பது சாலச்சிறந்தது. ஆனால் தாய்மொழியை மறக்காமல், மறைக்காமல் தெரிந்து வைத்திருத்தல் அதனிலும் சிறந்தது.

இக்கரை மாட்டுக்கு அக்கரைப் பச்சை என்பது போல நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமது தாய்மொழியில் புதைந்து கிடக்கும் கோடான கோடி நல்ல விஷயங்களை அறிந்து, உணர்ந்து, புரிந்து வைத்திருந்தால் அது நம் வாழ்க்கையை செழுமையாக்குவதோடு, வாழ்வதை இனிமையாக்கும்.

விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொண்டார்-உன்போல்
குறட்டை விட்டோரெல்லாம் கோட்டைவிட்டார்!

தமிழும் வாழ வேண்டும் மனிதன்
தரமும் வாழ வேண்டும்

என்றும் அன்புடன்,

உங்கள் நலன்பேணும் உங்களில் ஒருவன்

டத்தோஸ்ரீ எம்.சரவணன்
மனிதவள அமைச்சர்
ம.இ.கா தேசிய துணைத் தலைவர்