கோலாலம்பூர்: நேற்று புதன்கிழமை (பிப்ரவரி 24) மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அவசரநிலை காலக்கட்டத்தில் நாடாளுமன்ற அமர்வை நடத்தலாம் என்று ஒப்புக் கொண்டதன் அடிப்படையில், மார்ச் மாதத் தொடக்கத்தில் அதனை தொடங்க, பிரதமர் மாமன்னருக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று நம்பிக்கை கூட்டணி தலைவர்கள் மன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.
இது நம்பிக்கை கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் விருப்பம் என்று அம்மன்றம் நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“நாட்டின் நிர்வாகமும், நீதித்துறையும் செயல்படுகிறது. நாடாளுமன்ற அமர்வும் நடத்துவது சாத்தியமானது. நாட்டின் நிர்வாகம் சிறந்த முறையில் இயங்க நாடாளுமன்ற அமர்வு முக்கியமானது,” என்று
அது கூறியது.
எனவே, மலேசிய அரசியலமைப்பில் முக்கிய பங்கு வகிப்பதில் நாடாளுமன்றத்தின் நிலையை மீட்டெடுப்பதற்காக மாமன்னரின் விருப்பத்தை நம்பிக்கை கூட்டணி முழுமையாக ஆதரிப்பதாகக் கூறியது.
கொவிட் -19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை முன்னிறுத்தி, நாட்டின் பொருளாதாரத்தை புதுப்பிக்கவும் திட்டங்களை முன்னெடுக்க அது தயாராக இருப்பதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.