புதுச்சேரி : அண்மையில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்ததைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் குடியரசுத் தலைவரின் ஆட்சி அமுலாக்கப்பட்டிருக்கிறது.
வேறு எந்தக் கட்சியும் புதிய ஆட்சி அமைக்க முன்வராத காரணத்தால் புதுச்சேரி மாநிலத்தில் குடியரசுத் தலைவரின் ஆட்சி கொண்டுவரப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதைத் தொடர்ந்து துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் நேரடி நிர்வாகத்தின் கீழ் இனி புதுச்சேரி செயல்படும்.
இன்று வியாழக்கிழமை புதுச்சேரி மாநிலத்திற்கு வருகை தந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அந்த மாநிலத்திற்கான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை அறிவித்தார்.
மே மாதத்திற்குள் புதுச்சேரி மாநிலத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் இப்போதைய சூழ்நிலையில் குடியரசுத் தலைவரின் ஆட்சியே அப்படியே தொடரலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
கடந்த திங்கட்கிழமை (பிப்ரவரி 22) காலையில் புதுச்சேரி சட்டமன்றத்தில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக நம்பிக்கைத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இந்தத் தீர்மானத்தை நடத்தும்படி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டிருந்தார்.
அதைத் தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்தில் ஆட்சி கவிழ்ந்தது. அதைத் தொடர்ந்து நாராயணசாமி தனது பதவி விலகலைச் சமர்ப்பித்தார்.