கோலாலம்பூர்: சீனரல்லாத மலேசிய குடிமக்கள் இப்போது மசீசவில் இணை உறுப்பினராக இணையலாம்.
மசீச அரசியலமைப்பில் இது தொடர்பான திருத்தங்களுக்கு சங்கப் பதிவாளர் ஒப்புதல் அளித்ததை அடுத்து இந்த முடிவறிவிக்கப்பட்டது. இது 2019-இல் கட்சியால் முடிவு செய்யப்பட்டது.
மசீச தலைமைச் செயலாளர் சோங் சின் வூன் கூறுகையில், பொதுத் தேர்தலுக்கு ஆறு மாதங்கள் அல்லது 36 மாதங்களுக்கு முன்னர் கட்சித் தேர்தல்கள் நடத்தப்படுவது குறித்தும் ஒப்புதல் அளிக்கப்பட்டதாகக் கூறினார்.
“இந்த திருத்தங்கள் அனைத்தும் உடனடியாக நடைமுறைக்கு வரும். இனிமேல், மசீசவில் சீனரல்லாத சமூகத்தினரை உறுப்பினர்களாக ஏற்றுக்கொள்ள முடியும்,” என்று அவர் நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
முன்னதாக 2019- ஆம் ஆண்டில், மசீச துணைத் தலைவர் டாக்டர் மா ஹாங் சூன், இணை உறுப்பினர்களுக்கு எந்தவொரு கூட்டத்திலும் அல்லது சந்திப்பிலும் வாக்களிக்கும் உரிமை இல்லை என்று கூறினார்.
பெர்சாட்டு மற்றும் பாஸ் ஆகியவை பூமிபுத்ரா அல்லாத மற்றும் முஸ்லிம் அல்லாத குடிமக்களுக்கான இணை உறுப்பினர்ளைக் கொண்டுள்ளன. இரு கட்சிகளின் இணை உறுப்பினர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை இல்லை.