கோலாலம்பூர் : அண்மைய சில நாட்களாக கூட்டரசுப் பிரதேச துணையமைச்சர் டத்தோஸ்ரீ எட்மண்ட் சந்தாரா நியூசிலாந்துக்கு இரண்டு மாதங்களுக்கும் மேலாக விடுமுறையில் சென்றுள்ள விவகாரம் பரவலான சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் இங்கில்லாததால் அவரின் நாடாளுமன்றத் தொகுதியான சிகாமாட்டிலும் மக்கள் சேவைகள் பாதிப்படைந்ததாக சில தரப்புகள் கூறி வருகின்றன.
இந்நிலையில், இன்று புதன்கிழமை (மார்ச் 3) கூட்டரசுப் பிரதேச துணையமைச்சருக்கான அலுவலகத்தில் எட்மண்ட் சந்தாராவின் சிறப்புச் செயலாளர் எம்.யு.இராஜா பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார்.
அந்தச் சந்திப்பின்போது எட்மண்ட் சந்தாரா நாட்டில் இல்லாவிட்டாலும் அவர் சார்பிலான சேவைகள் சிகாமாட் தொகுதியிலும், கூட்டரசுப் பிரதேசத்திலும் தங்கு தடையின்றி தொடர்ந்து கொண்டிருப்பதாக இராஜா தெரிவித்தார்.
கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி எட்மண்ட் சந்தாரா கோலாலம்பூரில் இருந்து நியூசிலாந்து புறப்பட்டு சென்றார். அங்கு தங்கியிருக்கும் அவரின் குடும்பத்தினரை அவர் கொவிட்-19 பாதிப்புகளால் நீண்ட காலமாக சந்திக்க முடியாமல் இருந்தார் எட்மண்ட் சந்தாரா.
குடும்பத்தினரைச் சந்திக்கச் சென்ற அவர் முறையான விடுமுறை அனுமதிக்கு விண்ணப்பித்துத்தான் நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார். நியூசிலாந்து சென்றதும் அங்கு அவர் இரண்டு வாரங்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டார். அதன் பின்னரே குடும்பத்தினரோடு இணைந்து கொள்ள அனுமதிக்கப்பட்டார், எனவும் இராஜா விளக்கமளித்தார்.
எதிர்வரும் மார்ச் 20-ஆம் தேதி எட்மண்ட் சந்தாரா நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எட்மண்ட் சந்தாராவின் சேவைகள் சிகாமாட்டிலும், கூட்டரசுப் பிரதேசத்திலும் தொடர்ந்து கொண்டிருப்பதற்கான பல உதாரண சம்பவங்களை இராஜா விவரித்தார்.
தீவிபத்து சம்பவங்களில் உதவி
செந்துலிலும், கம்போங் பாண்டானிலும் அண்மையில் நிகழ்ந்த தீவிபத்துகளைத் தொடர்ந்து எட்மண்ட் சந்தாரா உத்தரவின் பேரில் தானும் மற்ற அதிகாரிகளும் இரவோடிரவாக சென்ற பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து அவர்களுக்கு வேண்டிய நிவாரண உதவிகளை வழங்கியதாகவும் ராஜா குறிப்பிட்டார்.
தினமும் இணையத் தொடர்புகளின் மூலம் எட்மண்ட் சந்தாரா தனது சேவைகளையும், பணிகளையும் கண்காணித்துத் தொடர்ந்து கொண்டிருக்கிறார் என்றும் ராஜா தெரிவித்தார். உடனுக்குடன் உத்தரவுகளை வழங்குவதோடு, அதன்படியே தங்களைப் போன்ற சிறப்பு அதிகாரிகளின் பணிகள் நடைபெறுகின்றன என்றும் இராஜா மேலும் குறிப்பிட்டார்.
சிகாமாட்டில் தமிழ்ப் பள்ளிகளுக்கு பெரும் உதவிகள்
சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியில் எட்மண்ட் சந்தாரா ஏற்கனவே பெரும் பணிகளை நிறைவேற்றியிருக்கிறார். அங்குள்ள அனைத்துத் தமிழ்ப் பள்ளிகளுக்கும் வகுப்பறைகளில் குளிர்சாதன வசதிகளைச் செய்துத் தந்திருக்கிறார்.
அண்மையில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டபோது அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி சீருடைகள், பள்ளி உபகரணங்கள் ஆகியவற்றை நேரடியாகக் கண்காணித்துப் பெற்றுத் தந்தார்.
தனக்குரிய துணையமைச்சருக்கான சம்பளத்தையும் அவர் அப்படியே தொகுதிப் பணிகளுக்காகத்தான் செலவிட்டு வருகின்றார் என்றுர் இராஜா கூறினார்.
மித்ரா உதவியோடு முகக் கவசம், கிருமி நாசினி விநியோகம்
நாட்டிலிருந்து புறப்படுவதற்கு முன்னர் எட்மண்ட் சந்தாரா, மித்ராவுடன் பேச்சுவார்த்தை நடத்தி கல்வி அமைச்சின் ஒத்துழைப்புடன் நாடு முழுவதிலும் உள்ள 80,757 பள்ளி மாணவர்களுக்கு முகக் கவசம், கிருமி நாசினி பொருட்கள் விநியோகிக்கப்பட ஏற்பாடுகள் செய்தார்.
இதற்கான செலவினங்களை மித்ரா ஏற்றுக் கொண்டது. எட்மண்ட் சந்தாரா நாட்டில் இல்லாத காலகட்டத்தில்தான் இந்த பயனான விநியோகம் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் இதுபோன்ற பள்ளி உபகரணங்கள் நாடு முழுவதிலும் உள்ள 10 ஆயிரம் பாலர் பள்ளி மாணவர்களுக்கும் எட்மண்ட் சந்தாரா ஏற்பாட்டின் மூலம் வழங்கப்பட்டன.
“இதுபோன்ற சேவைகளை, தங்களின் நாடாளுமன்றத் தொகுதியில் மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாராவது இருக்கிறார்களா?” எனக் கேள்வி எழுப்பிய இராஜா, விடுமுறையில் இருந்தாலும், எட்மண்ட் சந்தாராவின் சேவைகளும், துணையமைச்சருக்கான பணிகளும் தங்கு தடையின்றி தொடர்ந்து கொண்டிருக்கும் என உறுதிபடத் தெரிவித்தார்.