கோலாலம்பூர்: தேசிய கூட்டணி அரசாங்கம் சிறார் திருமண பிரச்சனைக்கு தீர்வு காண உறுதிபூண்டுள்ளது என்று பெண்கள், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் ரினா ஹருண் தெரிவித்தார்.
தற்போது, அரசாங்கத்தில் மாற்றம் இருந்தபோதிலும், குழந்தைகள் தங்கள் முழு திறனை வளர்த்துக் கொள்ள எப்போதும் அனுமதிக்க வேண்டும் என்பதே தனது அமைச்சின் நிலைப்பாடு என்று ரினா கூறினார்.
“அவர்களின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் எந்தவொரு நடவடிக்கைகளும், குறிப்பாக கல்வி மற்றும் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நிறுத்தப்பட வேண்டும். இதனால் அவர்கள் சிறந்த எதிர்காலத்தைத் தொடர முடியும்,” என்று அவர் மேலும் கூறினார்.
சிறார் திருமணம் என்பது குழந்தைகளின் உடல்நலம், கல்வி மற்றும் பொருளாதார வாய்ப்புகளில் கடுமையான நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்று ரினா குறிப்பிட்டார்.
“மலேசியாவில், ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக பல்வேறு மதம், இனம் அல்லது சமூகத்தைச் சேர்ந்த 1,500 சிறார்கள் திருமணம் செய்கிறார்கள். இந்த நடைமுறை நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில், முஸ்லிம் மற்றும் முஸ்லிமல்லாதவர்கள், பூர்வக்குடியினர், புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் சமூகங்களிடையே கூட நடக்கிறது,” என்று அவர் கூறினார்.